ஞாயிறு, 14 ஜூன், 2015

மலாலா - 1

என்னுரை
 மலாலா.
இன்று உலகமெங்கும் உச்சரிக்கப்படும் பெயர்.
யார் இந்தச் சிறுமி?
அவளுக்கு ஏன் இத்தனை வரவேற்பு?
சின்னஞ்சிறு வயதிலேயே, உலக அளவில் பேசப்படும் தீவிரவாதிகளான தாலிபான்களை எதிர்த்து அறிவாயுதம் ஏந்திப் போராடியவள் என்பதுதான் ஒரே காரணம்.
உலக நாடுகளின் விருதுகள், பரிசுகள், அத்தனைக்கும் மேலாக மிக உயரிய நோபல் பரிசு போன்ற அனைத்தும் அப்புறம்தான்.
அந்தச் சிறுமி எழுதிய நான் மலாலாஎன்ற நூல் உலக நாடுகளில் விற்பனையில் சாதனை படைத்துள்ளது. பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.
தமிழில் மலாலா பற்றி ஒரு நூல் வேண்டுமென்று நண்பர் சாதிக் அவர்கள் கேட்டதன் காரணமாகவே இந்த நூல் உங்கள் கைகளில் தவழ்கிறது.
இந்நூலை வாசிப்பவர்கள் அனைவரும் மலாலாவை நேசிப்பது நிச்சயம்.

அன்புடன்
மேலூர் தென்றல்,
கோவை.

பிஸ்டல் ஒன்று தோட்டாக்கள் மூன்று
சிறிய பள்ளிப் பேருந்து ஒன்று. பெயர்தான் பேருந்து. ஆனால் அது பார்ப்பதற்கு நம்முடைய ஊரில்  பொருட்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தும் குட்டி யானைக்கு மேலேயும், சுற்றிலும் கண்ணாடி, துணிகள் ஆகியவற்றால் அடைக்கப் பட்டு ஆட்டோ போல் இருந்தது.
அதனுள்ளே ஏழு முதல் எட்டுக் குழந்தைகள் அமரும் வகையில் நீளமான மரத்தால் ஆன மூன்று இருக்கைகள் இருந்தன.
சுற்றிலும் கடினமான கண்ணாடி கொண்டு மூடப்பட்டு இருந்தது.
வெளிப்பக்கத்தில் கெட்டியான தார்பாய் போன்ற பாலித்தீன் ஷீட் கொண்டு மூடப்பட்டிருந்தது.
உள்ளேயிருந்து கண்ணாடியின் வழியே கூட வெளியில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதும் மிகவும் கடினம்.
எப்போதாவது தார்பாய் லேசாக காற்றில் அசைந்தால் மட்டுமே வெளிப்புறக் காட்சிகளை உள்ளே இருக்கும் சிறுமிகள் பார்க்க முடியும்.
2012, அக்டோபர் 9. 
வழக்கம் போலவே பள்ளியிலிருந்து குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பேருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது இராணுவ சாவடியைக் கடந்து, பரந்து விரிந்திருந்த கிரிக்கெட் மைதானத்தை சுற்றிவந்து திரும்பியபோது திடீரென்று நிறுத்தப்பட்டது. அந்த இடத்திற்கு அருகே ஸ்வாட் மாகாணத்தின் முதல் நிதியமைச்சர் ஷெர்  முகமது கானின் சமாதி இருந்தது. மற்றொரு புறத்தில் ருசியான தின்பண்டங்கள் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலை ஒன்று இருந்தது. அந்த இடம் செக் பாயிண்ட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரம் இருக்கலாம்.
பேருந்து எதற்காக நிற்கிறது என்று தெரியாமல் பள்ளிச் சிறுமிகள் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்தபோது வெளிப்புறத்தில் முகத்தை ஓரளவு மூடிய நிலையில் ஒருவன் வந்து நின்றான். வெளிறிய வண்ணத்தில் ஒரு சட்டை அணிந்திருந்தான். அவனின் தாடி மறைக்கப்பட்ட முகத்திலிருந்து வெளியே எட்டிப் பார்த்தது.
டிரைவரைப் பார்த்து, “இது குஷால் பள்ளியின் பேருந்தா?” என்று விசாரித்தான்.
முட்டாள்தனமாக கேள்வி கேட்கிறானே. பேருந்தின் பக்கவாட்டிலேயே பள்ளியினுடைய பெயர் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறதே என்று மனதில் நினைத்தவாறே ஆம்என்று பதிலளித்தார் டிரைவர்.
சில சிறுமிகளைப் பற்றிய தகவல் எனக்கு வேண்டும்
அதை நீங்கள் பள்ளியின் அலுவலகத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்
இவர்களின் உரையாடல் நடந்து கொண்டிருந்தபோதே பின்புறக் கதவின் அருகே மற்றொரு தடியன் வந்தான். அவன் பார்ப்பதற்கு கல்லூரியில் படிக்கும் வாலிபன் போலவும், தாடி வைத்த கேடி போலவும் இருந்தான்.
வெளியே நடக்கும் உரையாடலையும், பின்புறமாக ஒருவன் வந்து நிற்பதையும் கவனித்துக் கொண்டிருந்த சிறுமிகளில் மோனிபா என்ற சிறுமி, “உன்னைப் பேட்டி எடுக்க வந்திருக்கிறார்கள் போலஎன்று மலாலாவைப் பார்த்துப் புன்னகையுடன் கூறினாள்.
அதே நேரத்தில் ஆக்ரோஷமான குரலில், “யார் இங்கே மலாலா?” என்று பின்னால் நின்றவன் கர்ஜித்தான்.
அவன் குரலில் இருந்த கடுமையைக் கேட்ட சிறுமிகள் வாயடைத்துப் போனார்கள்.
ஆனால் அவர்கள் அனைவரின் பார்வையும் இயல்பாக மலாலாவின் மேலேயே பதிந்தது.
தன் கையில் இருந்த கோல்ட் 45 என்ற துப்பாக்கியை உயர்த்தியவாறே சிறுமிகளை முறைத்துப் பார்த்தான். அதைப் பார்த்தவுடன் பயந்துபோன சிறுமிகள் பெருங் குரலில் கத்தத் தொடங்கினார்கள்.
மலாலாவும் சற்றே பயந்தவாறே தனது தோழியின் கையை இறுகப் பற்றிக் கொண்டாள்.
மற்ற சிறுமிகளைப் போல் உடலை முழுவதுமாக மறைக்கும் விதமாக பர்தா அணியாமல் இருந்ததையும், அனைவரும் அவளையே பார்த்ததையும் வைத்து அவள் தான் மலாலா என்பதை அறிந்துகொண்ட அவன் அவளை நோக்கி உடனே சுடத் தொடங்கினான்.
துப்பாக்கியிலிருந்து குண்டுகள் மிக ஆக்ரோஷமாக வெளிப்படத் தொடங்கின.
ஒரு குண்டு அவளின் அழகிய கண் இமையைத் துளைத்தவாறு சென்று இடது தோள்பட்டையின் வழியாக வெளியில் வந்தது.
இரத்தம் பீறிட்டது. பொங்கி வந்த இரத்தத்துடன் அருகே இருந்த தோழி மோனிபாவின் மேல் மயங்கிச் சரிந்தாள்.
அடுத்தடுத்து சீறிப் பாய்ந்த குண்டுகள் சாஸியா ரம்ஜானின் இடது கையிலும், ஹைனா ரியாஸ் என்ற சிறுமியின் வலது தோள்பட்டையிலும் தவறாமல் பாய்ந்து அடைக்கலம் ஆகின.
தாங்கள் வந்த  வேலை முடிந்துவிட்ட திருப்தியில் தீவிரவாதிகள் பொறுமையாக தங்களுடைய வாகனத்தில் ஏறித் திரும்பினார்கள்.
அந்தப் பள்ளிப் பேருந்தின் உட்புறமும், இருக்கைகளும் இரத்த வெள்ளத்தில் நனைந்திருந்தன.
சிறுமிகளின் கூச்சல் அந்த இடத்தையே அதிர வைத்தது.
மலாலாவை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக அள்ளிக்கொண்டு விரைந்தனர்.
மருத்துவமனையில் மலாலாவை கீழே இறக்கும்போது அவளின் நீளமான கூந்தலிலும், மோனிபாவின் மடியிலும் இரத்தம் வழிந்து படர்ந்திருந்தது.
யார் அந்த மலாலா? அவளை மட்டும் குறிவைத்துச் சுட்டதன் பின்னணி என்ன?
அவள்மேல் அவர்களுக்கு என்ன கோபம்? எதனால் அப்படி வெறிகொண்டவர்களாக மாறிப் போனார்கள்?
அவர்களுக்குக் கோபம் ஏற்படும் வண்ணம்  அவள் என்ன செய்தாள்?
பள்ளிக்குழந்தைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவிற்கு வெறிகொண்ட இவர்கள் யார்?
அவர்களின் இலக்கு என்ன? கொள்கை என்ன?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக