திங்கள், 15 ஜூன், 2015

மலாலா - 4

கட்டுப்பாடு, கட்டுப்பாடு, மேலும் கட்டுப்பாடு
பெண்களுக்கு தாலிபான் குழு விதித்துள்ள கட்டுப்பாடுகளைப் முழுதுவதும் படித்துப் பார்த்தால் மயக்கமே வந்துவிடும்.
நின்றால் குற்றம், நடந்தாலும் குற்றம், பேசினால் பெரிய குற்றம். பிற ஆண்களிடம் எப்போதாவது பேசினாலும் மாபெரும் குற்றம். அவர்களைப் பொறுத்தவரையில் பெண்கள் பிள்ளை பெற்றுப்போடும் மெஷின்கள். ஆண்களுக்கு ருசியாக சமைத்துப் போடும் மெஷின்கள்.
வேறு ஏதாவது.. ம்கூம், மூச்சு கூட விடக் கூடாது. அவ்வளவுதான், அவ்வளவேதான். வேறு எதுவும் தேவை இல்லை அதற்கு மேல் பெண்களுக்கு வேலை ஒன்றும் இல்லை, பள்ளிக்கூடம்? கல்வி? அதெல்லாம் எதற்கு?
ஆப்கானிஸ்தான் தாலிபன்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, அவர்கள் பெண்களை படாதபாடு படுத்தியதால் சர்வதேச அரங்கில் மிகவும் மோசமான பெயரைப் பெற்றிருந்தனர்.
பெண்களுக்கு அவர்கள் விதித்த கட்டுப்பாடுகளில் சிலவற்றை மட்டும்  பார்க்கலாம்.
எட்டு வயதுப் பெண்ணாக இருந்தாலும் நெருங்கிய இரத்த உறவு அல்லது கணவன் ஆகியோர் தவிர வேறு எந்த ஆணுடனும் நேரடியாகப் பேசவோ, எந்தவிதத்திலும் தொடர்பு கொள்ளவோ கூடாது.
வேறு ஆண்கள் யாராவது வீட்டிற்குள் வரும் நிலை ஏற்பட்டால் ஹாலில் நிற்கக்கூட பெண்களுக்கு அனுமதி கிடையாது.
உடலை முழுமையாக மறைக்கும் விதத்தில் பர்தா அணியாமல் தெருவில் வருவது கூடாது. வெளியில் வரும் நேரத்திலும் கணுக்கால் கூட வெளியில் தெரிந்து விடக் கூடாது என்பது முக்கியம்.
ஆண்களின் உணர்வுகளைத் தூண்டும் விதத்தில், கண்ணைப் பறிக்கும் நிறத்தில் வண்ண ஆடைகள் எதையும்  அணிவதற்கும் தடை விதிக்கப்பட்டது.
உடலை இறுக்கும் விதத்திலோ, நாகரிகமாகவோ ஆடை அணிவதும் தடை செய்யப்பட்டது.
ஹைஹீல்ஸ் காலணிகளை ஒருபோதும் அணியக் கூடாது. ஆண்களின் இச்சைகளைத் தூண்டக்கூடிய வகையில் அது சத்தம் எழுப்பும் என்பதே காரணம்.
தெருவில் செல்லும் ஆண்கள் தப்பித் தவறிக்கூட வீடுகளில் உள்ள பெண்களைப் பார்த்துவிடக் கூடாது என்பதால் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் உள்ள அனைத்து ஜன்னல்களும் வண்ணங்கள் பூசப்பட்டும், திரையிடப்பட்டும் இருக்க வேண்டும்.
பெண்கள் தங்களுடைய வீடுகளுக்கு உள்ளே உள்ள பால்கனிகளில் நிற்பதைத்கூட தவிர்க்க வேண்டும் என்பது போன்ற கடுமையான விதிகள் அமலுக்கு வந்தன.
பெண்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளக் கூடாது. அது தேவையில்லாத ஒன்று.
பத்திரிக்கை, தொலைக்காட்சி போன்றவற்றில் தோன்றக் கூடாது.
சைக்கிள் ஓட்டக்கூடாது.
ஆண்களுடன் ஒரே பேருந்தில் பயணிக்கக்கூடாது.
பெண்கள் வேலைக்குச் செல்வதும் தடை செய்யப் பட்டது. அதுமட்டும் அல்லாமல் ஒரே நேரத்தில் பணியில் இருந்து அத்தனை பெண்களும் நீக்கப்பட்டார்கள்.
ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பெண்கள் வேலை இழந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளி ஆசிரியைகளாகப் பணியாற்றியவர்கள் என்பதால் அவர்கள் வேலை பார்த்த பள்ளிகளுக்கும் மூடுவிழா நடத்தப் பட்டது.
இவை கொஞ்சம்தான். இன்னும் அவர்கள் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்தார்கள். அனைத்தும் பெண்களுக்குத்தான்.
நூறு சதவிகிதம் இஸ்லாமிய ஒழுக்கங்களைக் கடைப் பிடித்தாக வேண்டும். துளிகூட அதில் குறையக் கூடாது. அப்படிக் குறைந்தால் யாராக இருந்தாலும் தண்டனை வழங்கப்படும். தண்டனையும் இஸ்லாமிய முறைப் படிதான் வழங்கப்படும்.
இங்கே நாம் ஒரு கருவி மட்டும்தான். நம்மை வழி நடத்தப்போவது ஷரியத் சட்டங்கள்தான்.
இறைத்தூதரின் வழியில்தான் நாம் செல்கிறோம். அதைத் தட்டிக்கேட்க யாருக்கும் உரிமை கிடையாது. யார் என்ன சொன்னாலும் அது நம்மை ஒருபோதும் பாதிக்கப் போவதில்லை. நமது வழியில் பயணம் செய்வது மட்டுமே இலக்காக இருக்க வேண்டும்.

இதெல்லாம் தாலிபான் இயக்கத் தலைவரான ஓமர் கூறியவை. இன்னும் பல விஷயங்கள் உள்ளன. அவை அவர்களுக்குள் நடைமுறையில் உள்ளவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக