முன்னோர் சென்ற வழி
மலாலாவின் தந்தை வழித் தாத்தாவின்
பெயர் ராகுல் ஹமீது. அவர் ஒருங்கிணைந்த இந்தியாவில் இருந்தபோது கான் அப்துல்
கபார் கான், முகமது அலி ஜின்னா, நேரு போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பேச்சை அவ்வப்போது
கேட்டு வளர்ந்தவர் என்பதால் அவர் இயற்கையிலேயே மற்றவர்களைக் கவரக்கூடிய வகையில்
பேசும் ஆற்றலைப் பெற்றிருந்தார்.
அவருடைய பேச்சைக் கேட்க வேண்டும்
என்பதற்காக மலையில் இருந்த மக்கள் கழுதை மேல் சவாரி செய்து இவர் உள்ள இடத்திற்கு
வருவது வழக்கம்.
உள்ளூர் பள்ளிவாசலில் இமாமாக
இருந்திருக்கிறார். உயர்நிலைப்பள்ளி அளவில்
தியாலஜி பாடங்களை நடத்துவார்.
யூசுப் சாய்க்கு ஒரு அண்ணன், ஐந்து தங்கைகள்.
மலைமேல் அமைந்திருந்த பர்கானா என்ற
ஊரில் பிறந்தவர்கள். அவர்களின் ஊரில் அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது.
பால், கோழி, இறைச்சி போன்ற உணவு வகைகள் யூசுப் சாய்க்கும், அவருடைய அண்ணனுக்கும் மட்டுமே வழங்கப்படும். பெண் குழந்தைகளுக்கு
கோழி இறகுகள், சிறிய எலும்புகள் போன்றவை மட்டுமே
வழங்கப்படும். பெண் பிள்ளைகள் என்பதுதான் அதற்குக் காரணம்.
மலாலாவின் குடும்பத்தினர் வருடத்திற்கு
இரண்டு முறை அங்கே செல்வது வழக்கம். அப்படிச் செல்லும் சூழலில் மருந்து
மாத்திரைகள் உட்பட அடிப்படை வசதிகளுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும்
தங்களுடன் எடுத்துச் செல்வார்கள்.
இயற்கையன்னையின் கருணைப் பார்வை அந்தப்
பகுதியில் அதிகமாகவே இருந்தது. குயில்களின் இனிய குரல் ஓசை, பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண மலர்கள், கண்ணுக்கு மட்டுமல்லாமல் நாவிற்கும் இனிய பழங்கள், பசுமை நிறைந்த புல்வெளிகள், சலசலத்து ஓடும்
ஆறு, அந்த ஆற்றில் நீர் அருந்துவதற்காக
வருகைபுரியும் நீர்க்கரடி போன்ற சிறிய விலங்கினங்கள் கண்ணுக்கும், மனதுக்கும் புத்துணர்வூட்டும் கிராமமாக அது இருந்தது.
அந்த கிராமத்தில் மண்ணைக் கொண்டு
கட்டப்பட்ட வீடுகள்தான் அதிகமாக இருக்கும்.
ஆண்கள் அனைவரும் வெளியில் வேலைக்காகச்
சென்று விடுவார்கள். பெண்கள் மட்டுமே
வீடுகளில் இருப்பார்கள்.
அந்த ஊரில் பனி அதிகமாக இருக்கும்.
அதனாலேயே பல குழந்தைகள் இறந்து போனதும் உண்டு. மருத்துவ சிகிச்சைக்கு சரியான
நேரத்தில் அழைத்துச் செல்ல முடியாமல் போவதுதான் அதற்குக் காரணம்.
மலாலா தன்னுடைய பெரியப்பாவை கான் தாதா
என்று செல்லமாக அழைப்பாள்.
அம்மா பிறந்த ஊரில் கற்களால் கட்டப்பட்ட வீடுகள் பல உண்டு.
அப்பாவின் ஊரைக் காட்டிலும் அம்மாவின் ஊர் சற்றே நாகரிகம் நிறைந்தது.
பெண்கள் வீட்டின் கீழ்ப்பகுதியில்
இருப்பார்கள். மேல்பகுதியில் ஆண்கள் இருப்பார்கள். கீழே சமையல் அறையில்
சமைக்கப்படும் பட்சணங்களை மேலே உள்ள ஆண் உறவினர்களுக்குக் கொடுத்து வருவது மலாலா
போன்ற சிறுமிகளின் வேலை.
அப்போது மின்சார வசதி இல்லையென்றபோதும்
கிராமத்து மக்கள் நீரின் சக்தியைக் கொண்டு மின்சாரம் தயாரித்து பயன்படுத்தும்
அளவிற்கு அறிவாளிகளாக இருந்தார்கள்.
ஆனால், ஆண்களுக்கு மட்டும்தான் ஓட்டுரிமை உண்டு, பெண்களுக்குக் கிடையாது என்ற கருத்து உள்ளவர்களாக, பிற்பட்டவர்களாகவே இருந்தார்கள்.
அம்மா இளமையில் கல்வி கற்கமுடியாத
சமூகத்தில் பிறந்திருந்தாலும் கல்வி பயில வேண்டும் என்பதில் பெரிய ஆர்வம்
இருந்தது. பள்ளியில் அனைவரும் ஆண்பிள்ளைகளாக இருந்ததும், தன்னைச் சுற்றியுள்ள வீடுகளில் இருந்த பெண்கள் அனைவரும் அடுப்படியில்
சமைப்பதிலேயே தங்கள் பொழுதைக் கழிப்பதைப் பார்த்தபின்னர் அவர் பள்ளி செல்வது
தடைப்பட்டது.
மற்ற பெண்களைப் போலவே மாறிவிட்டார்
அவர். ஆனால் அதற்காக இப்போதும் வருத்தப்படுவதுண்டு. கணவர் முற்போக்குவாதியாக
இருந்தும், அவர் எழுதும் கவிதைகளையோ, கட்டுரைகளையோ தான் படித்து ரசிக்க முடியவில்லையே என்ற ஏக்கம்
காரணமாக தற்போது ஆங்கிலம் கற்றுக் கொண்டிருக்கிறார். “அவரே வெளியில் கடைகளுக்குச் சென்று வரும் அளவிற்கு ஆங்கிலம் கற்றுக்
கொண்டிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று நியூயார்க் டைம்ஸ்
இதழில் மலாலா கூறியுள்ளார்.
பெண்களுக்கு கல்வி எந்த அளவிற்கு முக்கியம் என்பதை
தன்னுடைய அம்மாவிடம் இருந்துதான் கற்றுக் கொண்டதாக மலாலா கூறியுள்ளாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக