வீடு என்னும் கூடு
மலாலா பிறந்தபோது குடும்பம் மிகவும்
ஏழ்மையாகத்தான் இருந்தது. அப்போதுதான் யூசுப்பும், அவரின் நண்பரும் பள்ளி ஒன்றைப் புதிதாகத் தொடங்கியிருந்தனர்.
பள்ளிக்கு எதிரே இருந்த வீட்டிற்கு
மாறினார்கள். அந்த வீட்டில் இரண்டு அறைகள் இருந்தன. மலாலாவும் அவளின் பெற்றோரும்
ஒரு அறையில் உறங்குவர். மற்றொன்று உறவினர்கள் வரும்போது தங்கிக் கொள்வதற்காக
ஒதுக்கப் பட்டிருந்தது.
இது அந்தப் பகுதி மக்களுக்கே உரிய
வழக்கம். பஷ்டூன் இனத்தைச் சேர்ந்தவர்கள்
எப்படிப்பட்ட சிறிய வீட்டில் வசித்தாலும் உறவினர்களை உபசரிக்க வேண்டியது அவசியம்.
அந்த வீட்டில் குளிப்பதற்காகத் தனி
அறையோ, சமைப்பதற்கென்று சமையலறையோ கிடையாது.
எல்லாமே அந்த 2 அறைகளில்தான்.
மலாலாவின் தாய் விறகினைக் கொண்டு தரையில்தான்
அடுப்பு வைத்து சமைப்பார்கள்.
பள்ளியில் இருந்த குழாயில் வருகின்ற
தண்ணீரைக் கொண்டே துணிகளைத் துவைத்து
வருவார்கள்.
மலாலாவின் இல்லத்திற்கு
கிராமங்களிலிருந்து மக்கள் வந்தவண்ணமே இருப்பார்கள். விடுமுறை நாளில்கூட
ஜேஜேவென்று கூட்டம் இருக்கும்.
மலாலா பிறந்த இரண்டு வருடங்களுக்குப்
பிறகு ஒரு தம்பி பிறந்தான். அவனும் மலாலாவைப் போன்றே அவர்களுடைய வீட்டிலேயே
பிறந்தான்.
அவனுக்கு தன்னுடைய பள்ளியின் பெயரான
குஷால் என்பதையே பெயராகச் சூட்டினார் யூசுப். தம்பிக்கென புதியதாகத் தொட்டில்
வாங்கப்பட்டது.
மலாலா பிறந்தபோது அதை வாங்கக்கூட
பணமில்லாத சூழலில் பக்கத்து வீட்டுக்காரர்கள் தங்கள் குழந்தைக்காக வாங்கி பலமுறை
பயன்படுத்தியதையே இரவல் வாங்கி மலாலாவிற்கும் பயன்படுத்தினார்கள்.
ஐந்து வருடத்திற்குப் பின்னர்
மலாலாவிற்கு மீண்டும் ஒரு தம்பி பிறந்தான். அவனுக்கு அவளின் பெற்றோர் இட்ட பெயர்
அடால்.
மலாலா எப்போதும் குஷாலுடன்
விளையாடுவதில் பெரும் ஆர்வம் காட்டுவாள். ஏனெனில் அவர்கள் இருவருக்குமிடையே வயது
வித்தியாசம் பெரிதாக இல்லை.
இருவரும் ஒருவருக்கொருவர் மற்றவரைப்
பற்றி பெற்றோரிடம் புகார் பத்திரம் வாசிப்பதும் உண்டு.
இருவருமே சிறிய தம்பியான அடாலிடம்
மிகவும் பாசமாக இருப்பார்கள்.
அதிகாலை நேரத்தில் எழுந்திருப்பதில்
அவளுக்கு விருப்பமில்லை. அந்த நேரத்தில் தூங்குவதில் ஆர்வம் அதிகம் கொண்ட அவளை
யூசுப் சாய் ‘ஜானி முன்’ என்று அன்பாக எழுப்ப ஆரம்பிப்பார்.
‘இன்னும் சிறிதுநேரம் தூங்கிக் கொள்கிறேன்’
என்று புரண்டு படுக்கும் மலாலாவை சிறிதுநேரம்
சென்றவுடன் ‘என் இனிய பூனைக்குட்டியே
எழுந்திருக்கிறாயா?’ என்று அவளின் அம்மா எழுப்புவார்.
இதற்குமேலும் எழுந்திருக்காவிட்டால்
தாய் தந்தையின் செல்லப் பேச்சு ஆத்திரமாக மாறக்கூடும் என்பதால் சட்டென்று
எழுந்துவிடுவாள்.
அப்பாவின் பள்ளியில் வேலை பார்க்கும்
அனைத்து ஆசிரியைகளும் யூசுப் சாயை சகோதரனே என்று அன்பாக அழைப்பார்கள். அவரின்
மனைவியை அண்ணி என்ற அர்த்தத்தில் ‘பாபி’ என்பார்கள்.
அதை தினமும் கேட்கும் மலாலாவும் தனது
அம்மாவை ‘பாபி’ என்றே அழைப்பாள். அதற்கு என்ன அர்த்தம் என்றுகூட அப்போது அவளுக்குத் தெரியாது.
11 வயதிலேயே தன் அப்பாவைப் போல
முற்போக்கான சிந்தனைகள் உடையவளாகவே வளர்ந்தாள் மலாலா. அடிக்கடி தனக்கு ஏற்படும் சந்தேகங்களை
அப்பாவிடம் கேட்டுத் தெளிவு பெறுவதுண்டு.
தாலிபான்களின் கொடுமைகள் பற்றி
அவ்வப்போது இருவரும் உரையாடுவார்கள்.
தாலிபான்களுடைய முக்கியக் கொள்கையாக
இருந்த பெண் கல்வி எதிர்ப்பின் காரணமாக மலாலாவின் நெருங்கிய தோழிகள் மூன்று
பேரில் ஒருத்தி பெஷாவர் நகருக்கும், மற்றொருத்தி
லாகூருக்கும், வேறொருத்தி ராவல் பிண்டிக்கும் சென்று
விட்டார்கள்.
அது அவளை மனச்சோர்வடையச் செய்தது.
தாலிபான்கள் பெண்களை பலவிதமான அடக்கு
முறைகளுக்கு ஆளாக்குவதைக் கண்டு மனம் வெதும்பும் மலாலா பெண்கள் படிப்பதால்
அவர்களுக்கு என்ன கஷ்டம்? ஏன் அடிப்படை உரிமைகளைக் கூட தடை
செய்கிறார்கள்? என்று தன் தந்தையிடம் அவள் கேள்வி
எழுப்புவாள்.
அவர் அதற்கு பழமையான எண்ணங்கள் உடைய
தாலிபான் இயக்கம் பற்றியும் அவர்களின் பல்வேறு தாக்குதல்கள், அவர்களின் மூடத்தனமான பழக்க வழக்கங்கள்
பற்றியெல்லாம் மலாலாவிற்கு எடுத்துக் கூறுவதுண்டு.
2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மலாலாவைப்
பற்றி வெளி உலகத்திற்குத் தெரியவந்தது.
பெஷாவரில் நடைபெற்ற உள்ளூர்
பத்திரிக்கையாளர் கூட்டமொன்றில் யூசுப் சாய் தன்னுடைய மகளை அவர்கள் மத்தியில் பேச
வைத்தார்.
“என் கல்வி உரிமையைப் பறிக்க
தாலிபான்களுக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்.” என்று அவள் உணர்ச்சிகரமாகப் பேசியது செய்தித்தாள்கள் மற்றும்
தொலைக்காட்சியில் வெளிவந்து மக்கள் மத்தியில் பரபரப்பை உண்டாக்கியது.
உள்ளூர் மக்கள் அதைக் கண்டு
வியந்தார்கள். இந்த வயதில் எவ்வளவு தைரியம்? எல்லோரையும் மிரட்டுகிற தாலிபான்களையே எதிர்க்கும் அளவிற்கு
வலிமையான பெண்ணா அவள்? என்றெல்லாம் பலவாறு பேசினார்கள்.
சிலர் தாலிபான்களால் அவளுக்கு ஏதும்
ஆபத்து வந்து விடுமோ என்று பயந்தார்கள்.
2009ம் ஆண்டு ஸ்வாட் பள்ளத்தாக்குப்
பகுதியை முழுமையாகக் கைப்பற்றினார்கள் தாலிபான்கள்.
தீவிரவாதிகளின் அசுரப்பிடியில் அழகுக்
கொடி போல் இருந்த ஸ்வாட் பள்ளத்தாக்கு சிக்கிக் கொண்டது.
அன்றிலிருந்து அராஜகங்கள் தொடர்ந்தன.
இசை கேட்பது, தொலைக்காட்சி பார்ப்பது, பெண்கள் கல்வி
கற்பது, வெளியிடங்களில் எந்தக் காரணமின்றி
நடமாடுவது, ஆண்களின் துணையில்லாமல் பெண்கள்
வெளியில் ஷாப்பிங் செல்வது போன்ற செயல்கள் தடைசெய்யப்பட்டன.
பி.பி.சி. செய்தி நிறுவனத்திலிருந்து
அந்தப் பகுதிக்கு சிலர் வந்திருந்தார்கள்.
குஷால் பள்ளிக்கு வந்த அவர்கள்,
தாலிபான்களின் அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட
ஒரு மாணவி தன்னுடைய கல்வி நிலையைப் பற்றி
கட்டுரை எழுதினால் அனைவருக்கும் அது பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்கள்.
பி.பி.சி. நிறுவனம் தன்னுடைய தேடலை
ஆரம்பித்தது.
தாலிபான்களால் கட்டுப்படுத்தப்படும்
பெண்களின் நிலை பற்றி எழுத குஷால் பள்ளியிலிருந்து ஆயிஷா என்ற 15 வயதுச் சிறுமியைத் தேர்ந்தெடுத்தனர்.
அந்தச் சிறுமியின் குடும்பத்தார்
அதற்கு ஒத்துழைப்புத் தரவில்லை. அப்படியெல்லாம் எழுதுவது சாத்தியம் இல்லை, மீறி எழுதினால் தாலிபான்களால் தாக்கப்பட நேரிடலாம் என்று
பயந்தார்கள்.
அதன் காரணமாக தன்னுடைய மகளையே எழுதுமாறு கேட்டுக்
கொண்டார் யூசுப் சாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக