செவ்வாய், 16 ஜூன், 2015

மலாலா - 5

பிறப்பு
மங்கையராய் பிறந்திடவே என்ன மாதவம் செய்தீரோ? என்று  முழங்கினார் மகாகவி பாரதி.
பழங்காலத்தில் தமிழ் வளர்த்த மூதாட்டி ஔவையார் தொடங்கி ஜான்சிராணி, ராணி மங்கம்மாள் என நாட்டுக்கு உழைத்தோர் முதல் தாய் உள்ளம் கொண்ட தெரசா, விண்ணில் பல வீரசாகசங்கள் புரிந்த கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் என பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்த பெண்களைப் பற்றி அன்றே அவருடைய ஞான திருஷ்டியில் தோன்றியதோ என்னவோ?
அன்றே ஒரே வரியில் அனைத்து அர்த்தங்களையும் அடக்கிப் பாடி விட்டான்  பாட்டுத் தலைவன் பாரதி.
மேற்கண்டவர்களின் பட்டியலில் தனித்துவம் பெற்று, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மதம், இனம், மொழி என்று அனைத்து வேறுபாடுகளையும் கடந்து ஒரே லட்சியத்தைக் கொண்டு உலக மக்கள் அனைவரின் நெஞ்சங்களிலும் குடிகொண்டு ஜோதியாக ஒளிர்பவர் இலட்சியச் சிறுமி மலாலா.
எதற்காக உலகமே இவளைக் கொண்டாடுகிறது?
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியிலிருக்கும் கைபர் கணவாயின் அருகே உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் மிங்கோரா என்ற ஊரில் 1997-ம் ஆண்டு ஜுலை 12ம் தேதியன்று விடியற்காலையில்  ஜியாவுதீன் யூசுப் சாய், டோர் பெகாய் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தாள்.
வசதி வாய்ப்புக்கள் இல்லாத குடும்பம் என்பதால் மருத்துவமனைக்குச் செல்வதற்குக் கூட வழியில்லை. மருத்துவச்சியை அழைக்கவும் வழியில்லை.
எனவே அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்மணிகள் சிலர் வீட்டிலேயே வந்து பிரசவம் பார்த்துக் கொடுத்தார்கள்.
பெரும்பாலும் பாஷ்டூன் இன மக்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் அந்த தினத்தை அவர்கள் இருளான தினமாகவே கருதுவது வழக்கம். அந்த அளவிற்கு துக்கம் அனுஷ்டிப்பார்கள்.
விதவிதமாக உணவு சமைக்கவும், பல குழந்தைகளைப் பெற்றெடுக்கவும் மட்டுமே பெண்கள்  லாயக்கானவர்கள் என்பது  அப்போது இருந்த ஆண்களின் ஒட்டுமொத்தக் கருத்தாக இருந்தது.
ஆனால் மலாலாவின் தந்தை அதற்கு விதிவிலக்காக இருந்தார். அவர் முற்போக்கு சிந்தனைகள் நிரம்பியவர் என்பதால் தனக்குப் பிறந்த பெண் குழந்தையை வீட்டிற்கு வருகைபுரிந்த வசந்தகாலமாகவே பார்த்தார்.
பையன் பிறந்தால் தொட்டிலில் பணம், தங்கக் காசுகள், உலர்ந்த பழங்கள், விலையுயர்ந்த இரத்தினங்கள் போன்றவற்றைப் போட்டு மகிழ்வது அந்த இனத்தில் வழக்கம். மரபு என்றே கூடக் கூறலாம்.
அதேபோல் தங்களுக்குப் பிறந்த தங்க மகளுடைய தொட்டிலிலும் அவைகளைப் போட்டு மகிழ வேண்டும் என்பது யூசுப் சாயின் விருப்பம்.
அதை நிறைவேற்றி வைக்கும்படி தங்களின் நெருங்கிய உறவினர்களைக் கேட்டுக் கொண்டார்.
பாஷ்டூன் இனத்தில் பிறந்து 1861 - 1880 காலகட்டத்தில் வாழ்ந்த விடுதலை வேட்கை கொண்ட பெண் மலாலா. அப்பாவும், கணவரும் ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நடைபெற்ற போரில் தேசப்பற்றோடு கலந்து கொண்டவர்கள். 
விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டு நம் நாட்டு பாரதியார் போல் உணர்ச்சிப் பிழம்பாகக் கவிதைகளைக் கொட்டுவது மலாலாவின் வழக்கம். அவள் இறுதியில் நெருப்பிற்குப் பலியானாள்.
அதன்பிறகு பல இடங்களில் மலாலா என்ற பெயர் குழந்தைகளுக்கும், பல பள்ளிகளுக்கும் வைக்கப்பட்டது. அவருடைய கவிதைகளில் ஆர்வம் கொண்டிருந்த யூசுப் சாய் தன்னுடைய மகளுக்கும் மலாலா என்று பெயர் வைத்து மகிழ்ந்தார்.
மலாலா என்ற பெயருக்கு துயருற்ற என்பது அர்த்தம்.  அதன் காரணமாகவும் ஊரார் அந்தப் பெயரை வைக்க வேண்டாமென்று தடுத்தார்கள். ஆனால் யூசுப் சாயின் பிடிவாதமே கடைசியில் வென்றது.
கவிஞர் மலாலா மீண்டும் தோன்றுவாள் என்று ரஹ்மத் ஷா என்பவர் பாடல் எழுதினார். அந்தப் பாடலை அடிக்கடி பாடச் சொல்லி கேட்பது யூசுப் சாயின் வழக்கம். மலாலாவின் கதையையும் அவர் சொல்வார்.
இதுபோன்ற புரட்சிகரமான கருத்துக்களையுடைய கதைகளைக் கேட்டு வளர்ந்ததால் மலாலாவும் வீரம் நிறைந்தவளாகவே வளர்ந்தாள்.
பாஷ்டூன் இனத்தவரில் ஏழு அல்லது எட்டு, சில பேர் பத்துப்பிள்ளைகள் கூடப் பெற்றுக் கொள்வதுண்டு. ஆனால் மலாலாவின் தந்தையான யூசுப் சாய் மூன்றாவது பிள்ளையோடு நிறுத்திக் கொள்ளப் போகிறேன் என்று ஊராரிடம் கூறியபோது அவர்கள் அனைவரும் அவரை வித்தியாசமாகப் பார்த்தார்கள்.
இவன் எப்பவுமே இப்படித்தான். இவனைத் திருத்தவே முடியாது என்று பேசிக் கொண்டார்கள்.

அதுதான் யூசுப் சாய். மற்றவரைப் போலவே இருக்க வேண்டிய அவசியமில்லை. தனக்கு மனதில் எது சரியென்று படுகிறதோ அதைச் செய்துவிடுவது அவரின் வழக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக