ஞாயிறு, 21 ஜூன், 2015

மலாலா - 10

அறிவாயுதம்
வீட்டிலிருந்து நடக்கும் தூரத்தில் தான் அவள் படித்த பள்ளி இருந்தது. சில நேரங்களில் பேருந்துப் பயணம், சில நேரம் தோழிகளுடன் அரட்டை அடித்தபடியே ரிக்ஷாவில், மற்றும் சில நேரங்களில் பேசிக்கொண்டே, நடந்தே கூட வீட்டிற்குத் திரும்புவது உண்டு.
அவ்வாறு செல்லும் வழியில் சிறிய ஓடை, அழகான மலர்கள், கானம் பாடும் பறவைகள், அழகிய புல்வெளிகள், கிடுகிடு பள்ளத் தாக்கின் பசுமை போன்ற இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி செல்வது வழக்கம்.
பேருந்தில் பயணிக்கும்போது உஸ்மான் அலி என்ற டிரைவரை சகோதரரேஎன்று அழைத்து பேசுவாள்.
அவரும் குழந்தைகளுடன் நகைச் சுவையாகப் பேசுவது வழக்கம்.
தன் வாழ்வில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை அவர் வடிவேலு போல் முக பாவனைகளுடன் சொல்லும் விதத்திலேயே சிறுமிகள்  சிரித்து விடுவார்கள்.
பேருந்துப் பயணம் எப்போதும் மலாலாவிற்கும் அவளுடைய தோழிகளுக்கும் மிகவும் இனிமையாகவே இருக்கும்.
யூசுப் சாயின் நண்பர் ஜாகித் கான் என்பவர் ஆகஸ்ட் மாதத்தில் காலை நேரத் தொழுகைக்குச் செல்லும் வழியில் தீவிரவாதிகளால் சுடப்பட்டார்.
அதற்குப் பிறகு அந்தப் பகுதி மக்கள் அடுத்தது யூசுப் சாயாகத்தான் இருப்பார் என்று வெளிப்படையாகவே பேசிக் கொண்டார்கள்.
அதனால் தனக்கோ, தன் மகளுக்கோ ஆபத்து வந்து விடக் கூடாது என்று நினைத்த காரணத்தால்தான் நடந்து செல்வதைவிட பேருந்தில் செல்வது பாதுகாப்பானது என்று  மலாலாவிற்கு அறிவுறுத்தினார் யூசுப்.
பேருந்தில் செல்லும் மற்ற தோழிகள் அனைவரும் பர்தா அணிந்து செல்வது வழக்கம்.  20 தோழிகள் மற்றும் 3 ஆசிரியைகள் செல்வார்கள்.
பேருந்தின் இருக்கையில் மலாலாவிற்கு இருபுறமும் மோனிபா மற்றும் சாஸியா ரம்ஜான் ஆகிய தோழிகள்தான் எப்போதும் அமர்வார்கள்.
பேருந்தைச் சுற்றிலும் தார்பாலின் போன்ற பிளாஸ்டிக் திரை கொண்டு இறுக்கமாக மூடி விடுவார்கள். சிறிதும் காற்றோட்டமில்லாமலும், வெளியிலிருந்து யாரும் உள்ளே பார்க்க முடியாதபடியும் இருக்கும் அந்தப் பேருந்து செல்லும் வழியில் திரை எங்காவது சற்று விலகினால் வெளிக் காட்சிகளைப் பார்க்க முடியும்.
செக் பாயிண்ட், கிரிக்கெட் மைதானம் ஆகியவற்றை அவர்கள் அடிக்கடி பார்ப்பார்கள்.
அவள் வீட்டிற்குச் செல்லும் பாதை பேருந்தை விட்டு இறங்கி குறுகலான தெருப் பகுதியில் சிறிதுதூரம் நடந்து படிக்கட்டுப்போல் ஏறி மீண்டும் நடந்து செல்லக் கூடியதாக இருந்தது.
படிக்கட்டுக்கு அருகில் தான் செல்லும்போது யாரும் தீவிரவாதிகள் வந்து சுட்டுவிடுவார்களோ என்று கற்பனையில்  நினைத்துப் பார்க்கும் மலாலா அப்படி வந்தால் செருப்பைக் கழட்டி அவர்களை அடிக்க வேண்டும் என்று நினைப்பாள்.
அடுத்த கணமே, அப்படிச் செய்யக்கூடாது, அப்புறம் நமக்கும் அவர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லாமல் போய்விடும் என்று நினைப்பாள்.
சிறுமி என்பதால் அப்படி விதவிதமாகக் கற்பனை செய்து பார்ப்பாள்.
தீவிரவாதிகளிடம் நேரில் சென்று, “உனக்கும் எனக்கும் நேரடிப் பகை கிடையாது. என்னுடைய ஒரே நோக்கம் பள்ளி செல்லும் சிறுமிகளை நீங்கள் துன்புறுத்தக் கூடாது. அவர்கள் ஆசைப்படியே அவர்களைப் படிக்க விட வேண்டும்என்று பேசலாம் என நினைப்பாள்.
தீவிரவாதிகளைப் பற்றி அடிக்கடி கேள்விப்பட்டதன் காரணமாக தன்னுடைய அப்பாவையும் அவர்கள் சுட்டு விட்டது போலவும், குவிந்து கிடக்கும் சடலங்களுக்கு இடையில் தன் அப்பாவின் சடலத்தைத் தேடுவது போலவும், தீவிரவாதிகள் தன்னுடைய அப்பாவை சுடுவதற்காகத் துரத்துவது போலவும், அப்பா தலை தெறிக்க ஓடுவதைப் போலவும் கனவுகள் வருவதுண்டு.
ஒருமுறை அவள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது அவளின் பின்னாலேயே ஒரு தடியன் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்.
அத்துடன் உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன்என்று சத்தமாகக் கூறியது கேட்டு அவள் பயத்துடன் திரும்பிப் பார்த்தாள். அவனோ வேறெங்கோ பார்த்தபடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தான்.
மோனிபா என்ற தோழி அவளுடன் மிகவும் நெருங்கிய நட்பு கொண்டிருந்தாள்.
இருவரும் பேசாத விஷயம் இல்லை. புத்தகங்கள், நாடகங்கள், தீவிரவாதிகள் செய்யும் அட்டகாசம், எதிர்காலம், பள்ளியில் சொல்லித் தரும் ஆசிரியைகள், மற்ற தோழிகள், வீட்டில் விளையாட்டு, தம்பிகள் என்று அவர்கள் அனைத்து விஷயங்களையும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வார்கள்.
மோனிபாவிற்கு படித்து முடித்து நாகரிக உடை வடிவமைப்பாளராக வரவேண்டும் என்று ஒரு கனவு இருந்தது.
ஆனால் அவளின் வீட்டிலோ அவள் புகழ்பெற்ற டாக்டராக வர வேண்டும் என்று விரும்பினார்கள். அதனால் வீட்டில் அதைப் பற்றியே அவர்கள் அடிக்கடி பேசுவார்கள் என்பதால் மோனிபாவும் நாளடைவில் நான் டாக்டராகப் போகிறேன்என்றே பேசத் தொடங்கி விட்டாள்.
ஆனால் சிறு வயதிலிருந்தே மிகவும் துணிச்சலான பெண்ணாக வளர்ந்த மலாலா தான் பிற்காலத்தில் புகழ்பெற்ற மருத்துவராகவோ, கண்டுபிடிப்பாளராகவோ, மக்களுக்கு நல்லது செய்யும் அரசியல்வாதியாகவோ  வர விரும்புவதாக தோழிகளிடம் தெரிவிப்பாள்.
இந்த நிலையில்தான் முதல் அத்தியாயத்தில் பார்த்தபடி மலாலாவை சுட்டார்கள் தீவிரவாதிகள்.
பல ரகங்களில் உள்ள துப்பாக்கிகளையும், பலவிதமான வெடிகுண்டுகளையும் சர்வ சாதாரணமாகக் கையாளும் திறன் படைத்த அவர்கள் கல்வியைக் கண்டு பயந்ததுதான் விந்தை. வாசிப்பின்மேல் அவர்களுக்கு என்னவோ அவ்வளவு வெறுப்பு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக