செவ்வாய், 23 ஜூன், 2015

ஏவுகணை விஞ்ஞானி அப்துல்கலாம் - 3

பள்ளிப் படிப்பு
கலாமின் ஆரம்பக் கல்வி அவர் வசித்து வந்த இராமேஸ்வரத்திலேயே அவருக்குக் கிடைத்தது.
அங்கு அவருக்கு கோவில் குருக்களாக வேலை பார்த்து வந்த பட்சி லட்சுமண சாஸ்திரியின் மகன் இராமநாதனின் நட்பு கிடைத்தது. கலாமின் தந்தையும் லட்சுமண சாஸ்திரியும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் பிள்ளைகளும் நட்புடனே பழகி வந்தார்கள்.
இராமநாதன் பள்ளிக்கு வரும் அழகே தனி, உச்சிக் குடுமி, நெற்றி நிறைய பட்டை, பூணுல் என்று வருவார். கலாம் தலையில் குல்லாவுடன் வருவார். இருவரும் அருகருகே அமர்ந்திருப்பார்கள்.
பள்ளிக்கு புதிதாக வந்த ஆசிரியருக்கு இந்தக் காட்சியைப் பார்த்ததும் பிடிக்காமல் போனது. கலாமை கடைசி பெஞ்சில் சென்று உட்காருமாறு கூறினார்.
நண்பர்களுக்கு அழுகை வந்தது. நாம் என்ன தவறு செய்தோம்?’ என்ற கேள்வி அவர்களுக்குள் எழுந்தது.
குழந்தைகள் வீட்டிற்கு வந்தவுடன் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியை பெற்றோர்களிடம் கூறினார்கள்.
குருக்கள் பள்ளி ஆசிரியரை சந்தித்து ‘‘ சிறு பிள்ளைகளின் நெஞ்சில் மத வேறுபாட்டினை விதைத்துவிட வேண்டாம்’’ என்று கண்டித்தார்.
ஆசிரியரும் தனது செயலுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டார். அடுத்த நாள் திரும்பவும் நண்பர்கள் ஒன்று சேர்ந்தார்கள்.
அந்தப் பள்ளியின் அறிவியல் ஆசிரியராக பணியாற்றியவர் சிவசுப்பிரமணிய ஐயர். அவர் அறிவியல் பாடத்தை சுவையாக கற்றுத் தருவார். கலாமின் அறிவாற்றல் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். பிற்காலத்தில் சிறந்த மாணவனாக வரவேண்டும்என்று அடிக்கடி கூறுவார்.
ஒருமுறை கலாமை தனது இல்லத்திற்கு உணவு உண்பதற்காக அழைத்துச் சென்றார். ஆனால் சிவசுப்பிரமணிய ஐயரின் மனைவிக்கு இந்தச் செயல் சற்றும் பிடிக்கவில்லை. தனது மனைவியின் செயலுக்கு மிகவும் வருந்திய ஆசிரியர் தனது கையாலேயே கலாமிற்கு சாப்பாடு பரிமாறினார்.
நல்ல பழக்கங்களுடன் வளர்ந்திருந்த கலாம், தான் மற்றவர்களைப் போல இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக சாப்பிடுவது, தண்ணீர் அருந்துவது போன்றவற்றில் நாகரிகமாக இருந்ததுடன், தான் உணவருந்திய இடத்தையும் சுத்தம் செய்தார். அதைப் பார்த்த ஆசிரியரின் மனைவி மனம் நெகிழ்ந்தார்.
அடுத்தமுறை அங்கு சாப்பிடச் சென்றபோது ஆசிரியரின் மனைவியே கலாமிற்கு அன்புடன் உணவு பரிமாறினார்.
தனது நல்ல செயல்களால் மற்றவர்களையும் மாற்ற முடியும் என்பதை கலாம் உணர்ந்து கொண்டார்.
இந்த நேரத்தில் அவரது மற்றொரு நண்பரான ஜலாலுதீன் (கலாமிற்கும் அவருக்கும் 15 வயது வித்தியாசம்)  இலக்கியம் பற்றிய பல செய்திகளைக் கூறி கலாமை மகிழ்விப்பார். அவரின் தூண்டுதலால், மாணிக்கம் என்பவர் ஒரு நூலகத்தை நடத்தி வந்ததை அறிந்து அங்கு சென்று புத்தகங்களை வாங்கிவந்து படிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார் கலாம்.
ஜலாலுதீன், கலாமை செல்லமாக ஆஜாத்என்றுதான் அழைப்பார்.அவரது குடும்ப சூழல் காரணமாக அவர் படிக்க முடியாமல் போன காரணத்தால் கலாமை நன்கு படிக்குமாறு ஊக்குவித்தார்.
ஜலாலுதீன் நன்கு ஆங்கிலம் பேசவும், எழுதவும் கற்றிருந்தார். எல்லாம் அனுபவப் படிப்புதான். இராமேஸ்வரத்தில் யாருக்காவது விண்ணப்பங்கள் எழுத வேண்டியிருந்தாலோ, கடிதங்கள் எழுத வேண்டியிருந்தாலோ அவர்கள் ஜலாலுதீனிடம்தான் வருவார்கள். அவரும் மகிழ்ச்சியாகவே அவர்களுக்கு உதவி செய்வார்.
கலாமின் மற்றொரு ஒன்றுவிட்ட சகோதரரான சம்சுதீன் அந்தப் பகுதியின் செய்தித்தாள்கள் மற்றும் பல்வேறு இதழ்களுக்கு முகவராக இருந்த காரணத்தால் செய்தித் தாள்களில் வரும் படங்களைப் பார்த்து திருப்தியடைவார் கலாம். அதில் இடம் பெறும் விஷயங்கள் அப்போது கலாமிற்கு புரியும் வயதில்லை.
அப்போது நாளேடுகளில் தவறாமல் இடம் பிடிப்பவை விடுதலைப் போராட்டத்தைப் பற்றிய செய்திகள். அவற்றை கவனமாகப் படிக்கும் சகோதரர் சம்சுதீனும் அவருக்கு நிறைய உலக நடப்புகளை எடுத்துச் சொல்வார்.
கலாம் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே புளியங்கொட்டைகளை சேகரித்து மளிகைக் கடை ஒன்றில் கொடுத்து தினமும் ஒரு அணா பெறுவார்.
இராமேஸ்வரத்தில் ரயில் நிற்பதை தடை செய்தார்கள், அதனால் தனுஷ்கோடிக்குச் செல்லும் ரயிலில் இருந்து பத்திரிக்கைகளை பிளாட்பாரத்தில் வீசிவிட்டுச் செல்வார்கள். அதை சரியான நேரத்திற்கு எடுத்துவந்து கொடுப்பது கலாமின் வேலையாகிப் போனது. சம்சுதீன் அதற்கு சம்பளம் கொடுத்தார். அதுதான் கலாமின் முதல் சம்பாத்தியம். அதை இன்றும் மறக்கவில்லை கலாம்.
ஆரம்பக் கல்வி முடிவடைந்தது, உயர்நிலைக் கல்விக்கு  இராமநாதபுரம் சென்றுதான் படிக்க வேண்டும். கலாமின் தந்தை மகிழ்வோடு மகனை அனுப்பி வைத்தார்.
இராமநாதபுரத்தில் உள்ள ஸ்வார்ட்ஸ் பள்ளி கலாமின் உயர்நிலைப் படிப்பு தொடர வழிவகுத்தது. அதனால் பெருமை பெற்றது, அங்கிருந்த அய்யாதுரை சாலமன் என்னும் ஆசிரியரின் அன்புக்குரியவராக மாறிப்போனார் கலாம். கலாமின் அந்த வயதுக்கே உரிய குழப்பமான மனநிலையை மாற்றி தெளிவு ஏற்படச் செய்தவர் அந்த ஆசிரியர்தான்.
‘‘ எதை விரும்பினாலும் அது நிறைவேற வேண்டும் என்றால் அதற்கு தீவிரமாக ஆசை கொள்ள வேண்டும், அந்தச் செயல் நிச்சயமாக நடக்கும் என்று நம்பவேண்டும்’’ என்றதோடு ‘‘அவரவர் தலைவிதியை அவரவர்தான் நிர்ணயிக்கிறார்கள்’’ என்பதையும் அவர்தான் கலாமிற்குக் கற்றுக் கொடுத்தவர்.
இன்று இளைஞர்களை ‘‘கனவு காணுங்கள்’’ என்று கலாம் கூறுவதற்கு அடித்தளம் அமைத்தவர் அவர்தான்.
இருந்தபோதும் அவரின் மனம் கவர்ந்த இராமேஸ்வரம் போல இராமநாதபுரம் அவருக்கு அவ்வளவாக ஒத்துவரவில்லை. அம்மா செய்து தரும் விதவிதமான போளிகளும், வீட்டிலுள்ளோர்களின் அன்பும் அவரை ஏங்க வைத்தன.
சமயம் கிடைத்தபோதெல்லாம் இராமேஸ்வரத்திற்குச் சென்றுவருவதை வழக்கமாக்கிக் கொண்டார். அவ்வாறு வரும்போதெல்லாம் தனது அண்ணன் மற்றும் தம்பி வைத்திருந்த கடைகளில் நேரத்தைக் கழிப்பது கலாமிற்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது.
பதினொன்றாம் வகுப்பு வரை தமிழிலேயே படித்தார் கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்வில் சாதனை படைக்க மொழி ஒரு தடையல்ல என்பதற்கு கலாமின் வாழ்வே உதாரணமாகும்.
அந்தப் பள்ளியில் அவர் படித்துக் கொண்டிருந்தபோதுதான் நாடு விடுதலை அடைந்தது. நேருவின் உரையை வானொலியில் கேட்டார் கலாம். அதேநேரம் கல்கத்தாவில் ஏற்பட்ட இந்து & முஸ்லீம் கலவரம் பற்றி நாளேடுகளில் படித்த அவர் வேதனையடைந்தார். காந்தியடிகள் அதைத் தடுப்பதற்காக எடுத்த நடவடிக்கைகள் கலாமிற்கு காந்தியின் மேல் ஒரு நேசத்தை உண்டாக்கியது.
பள்ளியில் படிக்கும்போதே தனது தேவைகளுக்கான பணத்தை தானே சம்பாதிக்கும் பழக்கத்திற்கு வந்திருந்தார் கலாம். ஊருக்குச் செல்லும் போதெல்லாம் தானே சென்று அண்ணன் சம்சுதீனுக்கு உதவியாக பேப்பர் போடும் வேலை பார்ப்பார், அதில் கிடைக்கும் பணத்தை தனது செலவிற்குப் பயன்படுத்திக் கொண்டார்.
கலாம் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஒரு சம்பவம் நடைபெற்றது. ஒருமுறை கலாமின் கணக்கு வாத்தியாரான ராமகிருஷ்ண ஐயர் மற்றொரு வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது கலாம் திடீரென உள்ளே நுழைந்தது கண்டு கலாமை பிரம்பால் அடித்து விட்டார். ஆனால் சில மாதங்களுக்குப் பின்னால் அவரே கலாமை கணக்குப் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற்றதற்காக காலை பிரேயரின்போது வாழ்த்திப் பேசினார்.‘‘நமது பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் பிற்காலத்தில் இந்தப் பையன் பெருமை சேர்க்கப் போகிறான்’’ என்று கூறினார்.
இன்று அது உண்மையாகிவிட்டது.
சம்சுதீன் மற்றும் ஜலாலுதீன் இருவரும் கலாமின் வெளி உலக அறிவு வளர்வதற்கு மிகவும் உதவியாக இருந்தனர்.
பள்ளிப் பாடங்களைத் தவிர ஏராளமான புத்தகங்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாசித்தார் கலாம்.

மொழிப்பற்றுடன் நாட்டுப் பற்றும் அவரிடம் அமைந்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக