இரக்கமற்ற அரக்கர்கள்
காலை நேரம். இராணுவப் பள்ளி
அப்போதுதான் தொடங்கியிருந்தது.
குழந்தைகள் தங்களின் ஆசிரியை இன்று
என்ன கற்றுத்தரப் போகிறார் என்று மிகவும் ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
சரியாக காலை 10.30 மணிக்கு அவர்கள் ஒரு பெரிய வேனில் வந்து இறங்கினார்கள். மொத்தம் ஆறு பேர்.
தாங்கள் வந்த வேனை பள்ளியின்
பின்புறமாக நிறுத்திவிட்டு அதை தீ வைத்துக் கொளுத்தினார்கள்.
அப்படிச் செய்ததன்மூலம் யாரும் உள்ளே
நுழைந்து விடாமல் அந்தப் பாதையை தடுத்து விட்டார்கள்.
பாதுகாப்பு சோதனை நிறைந்த வழியை எச்சரிக்கையாகத் தவிர்த்து விட்டு
அதிகமாகப் பயன்பாட்டில் இல்லாத குறுகலான ஒரு சந்தின் வழியாக உள்ளே
நுழைந்தனர். அதிகமாக நடமாட்டமில்லை. ஆனாலும் ஓரிருவர் எதிர்ப்பட்டனர்.
வழியில் அவர்களைத் தடுத்த இராணுவ வீரர்
ஒருவர், வாயிற்காவலர், தோட்டக்காரர் ஆகியோரை கொஞ்சம்கூட யோசிக்காமல் சுட்டுக்
கொன்றனர்.
ஒரு வகுப்பறைக்குள் நுழைந்தார்கள்.
அவர்களின் கையில் இருந்த
துப்பாக்கியைக் கண்டதும் குழந்தைகளெல்லாம் பயத்தில் மிரண்டு வாயடைத்துப்
போனார்கள்.
“உங்களில் யாருக்கெல்லாம் உயிர் வாழ ஆசை
இருக்கிறது? கையைத் தூக்குங்கள்.” என குழந்தைகளைப் பார்த்து ஒருவன் கர்ஜித்தான்.
ஒருவர் மிச்சமில்லாமல் அனைத்துக்
குழந்தைகளும் கையைத் தூக்கினார்கள்.
அதிலிருந்து எட்டுக் குழந்தைகளை
மட்டும் முன்னால் வந்து நிற்கச் சொன்னார்கள்.
துப்பாக்கியை உயர்த்தினார்கள்.
எதிரே நிற்பது குழந்தைகள் என்பதுகூட
அவர்களின் அசுரக் கண்களுக்குத்
தெரியவில்லை.
கண் இமைக்கும் நேரத்தில் சுடத்
தொடங்கினார்கள். சரமாரியாக தோட்டாக்கள் பாய்ந்து குழந்தைகளின் அங்கங்களைச்
சிதறடித்தன.
சிலரின் தலைப்பகுதி சிதைந்து இள
இரத்தம் வகுப்பறை முழுவதும் பீய்ச்சியடித்தது.
அதைக்கண்டு பயந்த மற்ற குழந்தைகள் அலறினார்கள். அவர்களின் சத்தம் தொடர்ந்து
கேட்டது. அவர்களைச் சுட்ட பின்னரும் வெறி அடங்காமல் மற்ற குழந்தைகள் இருந்த
திசையில் தோட்டா மழை பொழிந்தார்கள்.
பயத்தில் ஓடிய குழந்தைகளை விரட்டிச்
சென்று தலையிலேயே சுட்டார்கள். பல குழந்தைகளின் முகம் அடையாளம் காணமுடியாதபடி
சிதைந்து போனது.
காலையில் பள்ளிக்குக் கிளம்பியபோது,
அவர்கள் அணிந்திருந்த பச்சை, மஞ்சள் நிற சீருடைகள் இரத்தச் சகதியில் நனைந்தன.
பிஞ்சுக் குழந்தைகள் பிணமாகி
விழுந்தார்கள்.
தொடர்ந்து ஈவு இரக்கம் இல்லாமல்
வெறியாட்டம் ஆடிவிட்டு அவர்கள் அனைவரும் சென்றபிறகு மொத்தம் 132 குழந்தைகள் உட்பட 148 பேர் இறந்திருந்தார்கள்.
இரக்கமற்ற, கொடூரமான,காட்டுமிராண்டித் தனமான இந்தச் செயலைச்
செய்தவர்கள் யார்?
அவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்?
அவர்கள்தான் தாலிபான்கள்.
அவர்களைப் பொறுத்தவரை எதிரே
இருப்பவர்கள் எதிரிகள். அதைத்தவிர வேறொன்றுமில்லை.
அது குழந்தையா, ஆணா, பெண்ணா, வயதானவர்களா என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள்.
முடித்துவிட வேண்டுமென்று முடிவு
எடுத்துவிட்டால் அவ்வளவுதான்.
அதிரடி சரவெடிதான்.
பாகிஸ்தானின் பழங்குடிப் பிரதேசமான
ஸ்வாட் பிராந்தியத்தைச் சேர்ந்த பஸ்லுல்லா என்பவன், ஹக்கீ முல்லா மெக்சூத் கொல்லப்பட்டபிறகு இந்த அமைப்பின் தலைமைப்
பொறுப்புக்கு வந்தவன்.
மாலகண்ட் மாவட்டத்தின் பெரும்பாலான
பகுதியை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்.
2009ம் ஆண்டு அரசால் எடுக்கப்பட்ட இராணுவ
நடவடிக்கைக்குப் பயந்துபோய் ஆப்கானிஸ்தானுக்குத் தப்பியோடி விட்டான்.
அங்கிருந்தபடியே தெக்ரீக்- இ- தலிபான் இயக்கத்தை வழிநடத்திக் கொண்டிருந்தான்.
வடக்கு வாஜிரிஸ்தான் பகுதியில் இராணுவத்தினர்
தங்கள்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது அவனுக்குப் பிடிக்கவில்லை.
அதற்குப் பழிவாங்கத்தான் பெஷாவர் பள்ளியில் தாக்குதல் நடத்தியதாக அவனது அமைப்பு
பின்னர் உறுதி செய்துள்ளது.
வேறு சிலரோ, மலாலாவிற்கு நோபல் பரிசு வழங்கப் பட்டதை எதிர்க்கும் விதமாகத்தான்
இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.
தீவிரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான்
பிரதமர் நவாஸ் ஷெரீப் முடிவு செய்தார்.
2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானில்
மரண தண்டனை நிறைவேற்ற தடை விதிக்கப்பட்டிருந்தது. அதை உடனடியாக நீக்கி
உத்தரவிட்டார். அந்த உத்தரவைத் தொடர்ந்து
பாகிஸ்தான் சிறையில் இருந்த இரண்டு தீவிரவாதிகள் தூக்கில் இடப்பட்டனர்.
தாலிபான் தீவிரவாத இயக்கத் தலைவர் முல்லா பஸ்லுல்லா
உட்பட 8 தீவிரவாதிகளுக்கு கைது வாரண்ட்
பிறப்பிக்கப்பட்டது.
பெஷாவர் தாக்குதலுக்கு திட்டம்
வகுத்துக் கொடுத்து மூளையாகச் செயல்பட்ட ரேடியோ முல்லா என்ற முல்லா பஸ்லுல்லா
ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்தபோது இராணுவத்தினரின் தாக்குதலுக்குப் பலியானார்.
தீவிரவாதிகள், “எங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் தொடர்ந்தால் உங்களின்
குடும்பத்திலுள்ள குழந்தைகள், அரசியல் தலைவர்களின் குழந்தைகள்,
இராணுவத்தினரின் குழந்தைகள் ஆகியோரை
வரிசையாகக் கொல்லத் தொடங்குவோம்” என்று நவாஷ்
ஷெரீப்புக்கு மிரட்டல் விடுத்தனர்.
அதற்கு எதிர்வினையாக ‘தீவிரவாதிகள் சரணடைய வேண்டும் இல்லாவிட்டால் சட்டத்தின் விளைவுகளை
சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்’ என்று பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன்
உசேன் தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக