புதன், 17 ஜூன், 2015

மலாலா - 7

சிலுசிலு  ஸ்வாட் பள்ளத்தாக்கு
ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதி பார்ப்பதற்கு மிக  அழகாக இருக்கும். சொர்க்கத்திற்குச் சென்று வந்தது போல் மிகவும் குளுமையாகவும், பசுமையாகவும்  இருக்கும்.
பழமையான காலத்தில் ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியை தோட்டம் என்று பொருள் வரும் விதத்தில் உத்யானாஎன்று அழைத்தார்கள். இங்கு பலவிதமான வண்ணவண்ண மலர்களும், சுவைமிகுந்த பல ரக பழங்களைக் கொண்ட வளமான பழத்தோட்டங்களும், மரகதக் கற்கள் நிறைந்த சுரங்கங்களும், நீண்ட நெடிய ஆறுகளும் இருந்தன.
காலை நேரத்தில் பறவைகளின் கீச்சுக்குரல் கேட்பதுண்டு. பழங்கள் நிறைந்த தோட்டங்கள் சற்று அதிக அளவில் உண்டு.
அலெக்ஸாண்டரால் நான்காம் நூற்றாண்டிலும், பௌத்தர்களால் ஆறாம் நூற்றாண்டிலும் இந்தப் பகுதி ஆக்கிரமிக்கப் பட்டது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இஸ்லாமியர்களின் கைகளுக்கு வந்து சேர்ந்து 1947ம் ஆண்டு பாகிஸ்தானுடன் இணைந்தது.
தாஜ்மஹால் கட்டப் பயன்படுத்திய பளிங்குக் கற்களைப் போலவே உள்ள கற்களைக் கொண்டு இந்தப் பகுதியிலும் ஒரு மாளிகை கட்டப்பட்டது.
அந்தப் பகுதிக்கு வந்த இங்கிலாந்து இராணி அந்த மாளிகையில் தங்கி ஓய்வெடுத்துச் சென்றார்.
அவர் அந்தக் பகுதியை கிழக்கின் ஸ்விட்சர்லாந்துஎன்று வர்ணித்தார். அதன்பிறகு அப்பகுதி மக்களும் அவ்வாறே அழைக்கத் தொடங்கினார்கள்.
கவிஞர்கள் கவிதைகள் மற்றும் சிறந்த பாடல்களை எழுதுவதற்காகவும் இங்கே வந்து தங்குவதுண்டு. ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியில் பிறந்து வளர்ந்ததாலோ என்னவோ அந்தப் பகுதி மலாலாவின் மனதிற்கு மிகவும் பிடித்தமானதாகவே இருந்தது.
அங்கு நிலவிய ரம்மியமான சூழல் அவள் மனதிற்கு மிகவும் பிடித்திருந்தது. மலைகளின் ராஜாஎன்றே அப்பகுதியைக் குறிப்பதுண்டு.
வெள்ளி போன்ற நீர்வீழ்ச்சி, நீலநிறத்தில் தெளிவான ஏரி என்று இயற்கையின் அனைத்துக் கொடைகளும் அந்தப் பகுதியில் கொட்டிக் கிடப்பதாகப் பெருமை கொள்வாள்.
பாகிஸ்தானின் பணக்கார மக்கள் தங்களுடைய விடுமுறை நாட்களில் இப்பகுதிக்கு வந்து சுத்தமான காற்றைச் சுவாசித்து இயற்கை அன்னை அள்ளிக் கொடுத்த காட்சிகளை ரசித்து ரசித்து தங்களை மகிழ்வித்துக் கொள்கிறார்கள்.
இத்தனை வளத்தைக் கொண்டுள்ள பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரம்தான் மிங்கோரா. சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து பல மக்கள் இந்தப் பகுதிக்குக் குடியேறியதால் மக்கள் நெருக்கடி நிறைந்த தாகவும், சுகாதாரக் குறைபாடுகள் நிறைந்ததாகவும் மாறிவிட்டது.
இப்பகுதியில் பல விடுதிகளும், கல்லூரிகளும், கோல்ப் பயிற்சி மைதானங்களும், பழமையை பறைசாற்றக்கூடிய கைவேலைப்பாடுகள், கல் வேலைப்பாடுகள் கொண்ட பலவிதமான பொருட்களையும் விற்கும் பிரபலமான கடைகளும் நிறைந்த நகரமாக காணப்படுகிறது.
இதில் மலாலாவின் வீடு அமைந்திருந்த பகுதி குல்காடா. மலர்கள் நிறைந்த பகுதி என்பது அதன் பொருள். ஆனால் பேச்சு வழக்கில் புத்தர் சிலைகள் நிறைந்த இடம் என்பது பொருளாகும்படி புட்காரா என்றே அழைக்கப்படுகிறது.
இஸ்லாம் மதத்தவரின் வருகை 11ம் நூற்றாண்டிலேயே தொடங்கியது. அதற்கு முன்னர் இரண்டாம் நூற்றாண்டில் புத்தமதத்தினர் இங்கு வருகைபுரிந்தனர் என்றும் அவர்களின் ஆட்சி ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தது என்றும் ஒரு செய்தி உள்ளது.
தற்போது புட்காரா பகுதியில் காணப்படும் இடிபாடுகள் குழந்தைகள் ஒளிந்து விளையாடுவதற்கான இடமாக மாறியுள்ளது. பல்வேறு சிலைகள் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றன.
அந்தப் பள்ளத்தாக்கில் அதிக அளவில் பழ மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இங்கு காணப்படும் நாவல் பழங்கள் அதிக இனிப்புச்சுவையுடன் காணப்படும். மேலும் மாதுளை, பீச் பழங்களும் காணப்படுகின்றன.
மலாலாவின் வீட்டுத் தோட்டத்தில் திராட்சைகளும், கொய்யாக்களும் நிறைந்திருந்தன.
வீட்டு முற்றத்தின் முன்பாக சுவைமிகுந்த பிளம்ஸ் மரங்களும் இருந்தன. கனிகள் தோன்றும் காலத்தில் அதைப் பறிப்பதற்காக குழந்தைகளுக்கும், பறவைகளுக்கும் இடையே போட்டியேற்படுவது வழக்கம். பறவைகள் அந்த மரத்தின் பழங்களை மிகவும் விரும்பிச் சாப்பிடும். மரங்கொத்திப் பறவைகளும் கூட அந்தப் பழங்களை விரும்பிச் சாப்பிடுவதுண்டு.
வீட்டின் பின்பகுதியில் மலாலாவின் அம்மா மற்றும் அவரின் தோழிகள் ஒன்றுகூடி ஊர்க்கதைகளைப் பேசி மகிழ்வார்கள்.
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த தோழிகள் வந்திருந்தால் அவர்களுக்கும் சேர்த்து உணவு சமைத்துப் பரிமாறுவது வழக்கம்.
மலாலாவிற்கு  தனது வீட்டின் மாடியில் அமர்ந்து கொண்டு மலைகள் சூழ்ந்த இயற்கைக் காட்சிகளைக் கண்டு கனவு காண்பது மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.
மலைகளைச் சூழ்ந்து காணப்படும் மேகங்கள் அழகான பெண்களின் கழுத்தில் அணியப்பட்டுள்ள வைர நெக்லஸ் போல காட்சியளிக்கும்.
இலையுதிர் காலத்தில் மெல்லிய காற்று உடலைத் தழுவும் சுகத்தினையும், குளிர்காலத்தில் எங்கும் காணக் கூடிய வெள்ளைநிறப் பனியினையும் கண்டு மகிழ்ச்சி கொள்வாள்.
வசந்தகாலத்தில் அந்தப் பள்ளத்தாக்கு முழுவதும் பசுமை நிறைந்து காணப்படும். யூகலிப்டஸ் மரத்தின் நறுமணம் வீடுகளுக்குள் புகுந்து விடும். எங்கும் கமகமவென்று வாசமாக இருக்கும்.
நெல் வயலில் முதிர்ந்து நிற்கும்  கதிர்கள் தனிப்பட்ட மணத்தைக் கொண்டவையாக விளங்கும்.

இப்பகுதியின் இயற்கைச் சூழலை அணுஅணுவாக ரசிப்பது மலாலாவின் பழக்கம். அது அவளின் மனதை மிகவும் உற்சாகப்படுத்தும். மகிழ்ச்சி பெருக்கெடுக்க வைக்கும். இயற்கையை ரசிக்கும் நேரத்தில் அவள் மற்ற நேரங்களைவிட அதிக அளவு உற்சாகமாகக் காணப் படுவாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக