ஞாயிறு, 21 ஜூன், 2015

மலாலா - 9

குதிரைப் பாய்ச்சல்
அப்போது மலாலாவின் வயது 11 என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது தொடங்கிய வேகம் தற்போது வரை நீடித்துக்கொண்டே இருக்கிறது அவளிடம்.
அவள் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, ஜனவரி 3ம் தேதி முதல்  பி.பி.சி.யில், ‘ஒரு பள்ளி மாணவியின் டைரிக் குறிப்புஎன்ற தலைப்பில் உருது மொழியில் தொடர்ந்து எழுதத் தொடங்கினாள் மலாலா.
தன்னுடைய சொந்தப் பெயரில் இல்லாமல் சோளப்பூஎன்னும் அர்த்தம் வரும் வகையில் குல்மகாய்என்ற புனைப்பெயரில்.
அப்போது பள்ளியில் மொத்தம் இருபத்தேழு மாணவிகள் படித்துக் கொண்டிருந்தார்கள்.  அவர்களில் 11 பேர்தான் பள்ளிக்கு வந்திருந்தார்கள். எல்லாவற்றிற்கும் தாலிபன்களே காரணம்.
பள்ளியிலிருந்து நான் திரும்பிக் கொண்டிருந்தபோது உன்னைக் கொன்றுவிடுவேன்என்ற குரல் கேட்டது. உடனே தலைதெறிக்க ஓடத் தொடங்கினேன். நல்ல வேளையாக அவன் என்னைப் பின்தொடரவில்லை என்றுதான் அந்தக் கட்டுரை ஆரம்பமானது.
தாலிபனுக்குப் பயந்து பள்ளிக்குச் செல்லும்போது சீருடை அணியாமல் சாதாரண உடையிலேயே செல்வது தன்னுடைய வழக்கம் என்பதையும் அக்கட்டுரைகளின் ஊடே அவ்வப்போது குறிப்பிட்டாள்.
முதல் ஸ்வாட் யுத்தத்தின்போது, தான் அடைந்த துன்பங்கள், தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் ஆகியவை பற்றி விரிவாகவே எழுதத் தொடங்கினாள்.
கல்வியும், கல்வி கற்பதற்கான உரிமையும் உங்களுக்கு மிகவும் சுலபமாகக் கிடைத்துவிடலாம். அதன் காரணமாக சில நேரம் உங்களுடைய ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகளும், படிக்கும் பாடங்களும் உங்களுக்கு மிகவும் சுமையாகத் தோன்றக்கூடும்.
ஸ்வாட் பள்ளத்தாக்கும் தாலிபான்களின் தொடர் படையெடுப்பிற்கு முன்பாக அப்படித்தான் இருந்தது. எப்போது கல்வி உரிமை பறிபோகத் தொடங்கியதோ அப்போதுதான் அதனுடைய முக்கியத்துவத்தை நாங்கள் உணரத் தொடங்கினோம்.
ஒரு பாகிஸ்தான் சிறுமி இளம் வயதில் கல்வி கற்பதை தாலிபான்கள் விரும்புவதில்லை. கல்வியின் ஆற்றல் கண்டு அவர்கள் பயப்படுகிறார்கள் என்றெல்லாம் தைரியமாக எழுதினாள்.
அவளது கட்டுரைகள் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து அமைதியான முறையில் பெண் கல்விக்காக தன்னுடைய கருத்துக்களை உலகிற்கு கூறிக்கொண்டே இருந்தாள்.
பெண்களுக்கு எதிரான தாலிபன்களின் அட்டூழியங்கள் தொடர்ந்தன. தொலைக்காட்சி, ஆவணப்படங்கள், பத்திரிக்கைப் பேட்டிகள் ஆகியவற்றின் மூலமாக மலாலாவின் தாலிபன் எதிர்ப்பும் தொடர்ந்தது.
நான் பிறவி எடுத்ததன் நோக்கம் மனிதகுலத்திற்குப் பயன்படுவதற்காகத்தான். எனக்கு ஒரு புதிய கனவு இருக்கிறது. பிரச்சனைகளால் சீரழிந்துள்ள என் நாட்டைச் சீர்செய்வதற்காக நான் ஒரு அரசியல்வாதியாக உருவாக வேண்டும்என்று ஒரு ஆவணப் படத்தில் பேசினாள் மலாலா.
அதன் காரணமாக உள்ளூர் மக்களிடையே அவள் மிகவும் புகழ்பெற்றாள். 
அவளுக்கு பல பரிசுகள், விருதுகள் முதலியவைகளும் கிடைக்கத் தொடங்கின.
அந்தப் பணத்தில்  படுக்கை மற்றும் சிறு அலமாரியை வாங்கி தன்னுடைய அறையை அழகாக அலங்கரித்தாள்.
மேலும் அவளின் அறையில் ஏராளமான தங்கநிறக் கோப்பைகளும், பல கேடயங்களும் நிறைந்திருந்தன. பெரும்பாலான தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்று விடுவாள் மலாலா.
இரண்டு முறை மட்டும் மால்கா ஈ நூர் என்னும் வகுப்பறைத் தோழியுடன் ஏற்பட்ட சிறு மனஸ்தாபம் காரணமாக முதல் இடத்தைத் தவறவிட்டாள்.
தாலிபான்கள் ஜனவரி மாதத்தில் உள்ளூரில் இயங்கிக் கொண்டிருந்த பள்ளிகளையெல்லாம் இழுத்து மூடுமாறு உத்தரவிட்டனர். மறுத்த பல பள்ளிகளை  இடித்து நொறுக்கினார்கள். எந்தப் பெண்ணும் பள்ளிக்குச் செல்லக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்தார்கள்.
பெண்களுக்கு கல்வி தேவையில்லை? அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்று கூறிவிட்டார்கள்.
பழமைவாதத்தில் ஊறித் திளைத்த அவர்கள் அதன் மூலம்தான் தங்களை மக்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள் என்று நம்பினார்கள்.
அறிவின் வாசலை அகலமாகத் திறந்துவைக்கும் கல்வி தங்களுக்கான வாசலை அறைந்து மூடிவிடும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அதனால்தான் அத்தனை அட்டூழியங்கள் செய்தார்கள்.
மலாலாவும் தாலிபான்களின் அடக்குமுறைகள் பற்றி தான் நேரடியாகப் பார்ப்பதையெல்லாம் உணர்ச்சி பூர்வமாக எழுதத் தொடங்கினாள்.
தாலிபான்கள் அந்தப் பகுதியில் செய்த அத்தனை செயல்களையும் மிகத் துல்லியமாக தனது டைரிக் குறிப்பில் பதிவு செய்யத் தொடங்கினாள். அதைப் படிப்பவர்களுக்கு தாலிபான்களின் நடவடிக்கைகளை நேரில் பார்ப்பதுபோல்   உணர்ச்சி தோன்றும் அளவிற்கு விளக்கமாக எழுதப்பட்டிருந்தது.
அந்தப் பகுதியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளை  அவர்கள் குண்டு வைத்துத் தகர்த்ததைப் பற்றி மிகவும் ஆவேசமாக தன்னுடைய கருத்துக்களைப் பதிவு செய்தாள்.
பள்ளிகள் தகர்க்கப்பட்டபோதும் அவள் தன்னுடைய இறுதியாண்டுத் தேர்வுக்காகத் தொடர்ந்து படித்து வந்தாள். எப்படியும் ஊரில் உள்ள நிலைமை சரியாகிவிடும் என்ற முழு நம்பிக்கை அவளுக்கு இருந்தது.
பாகிஸ்தான் இராணுவம் தன்னுடைய கடமையைச் சரிவரச் செய்யவில்லை என்ற தன்னுடைய மன ஆதங்கத்தையும் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறாள்.
பாகிஸ்தான் பிரதமர் சர்தாரியின் மகள் ஸ்வாட் பள்ளியில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவியாக இருந்தால் நிலைமை இப்படி இருக்குமா? என்றும் ஒரு கேள்வி எழுப்பினாள்.
பிப்ரவரி மாத இறுதியில் சில காரணங்களுக்காக தாலிபன்கள் சற்றே இறங்கி வந்தனர்.
மார்ச் 17ம் தேதி வரை பெண்கள் பர்கா, புர்கா அணிந்தவாறு பள்ளிக்குச் சென்று வரலாம். பள்ளித் தேர்வுகள் முடிவடைந்தபிறகு பெண்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். அதன்பின்னர் படிப்பு பற்றி நினைத்துப் பார்க்கக்கூடாது என்று திட்ட வட்டமாகக்  கூறிவிட்டார்கள்.
மலாலா மிகவும் நல்ல முறையில் தேர்வுகளை எழுதி முடித்தாள். அதிக மதிப்பெண்கள் வந்துவிடும் என்பதால் மிகவும் மகிழ்ச்சியாகவே காணப்பட்டாள்.
நியூயார்க் டைம்ஸ் நிறுவனத்திலிருந்து ஆவணப்படம் ஒன்றை எடுப்பதற்காக மலாலாவை அணுகினார்கள். அந்த ஆவணப்படம் மிக நன்றாகவே வந்திருந்தது. அது ஒளிபரப்பானவுடன் மீண்டும் புகழ்பெறத் தொடங்கினாள் அவள்.
மே மாதத்தில் இரண்டாம் ஸ்வாட் போரை பாகிஸ்தான் இராணுவத்தினர் தொடங்கினார்கள்.
சூழ்நிலை மிகவும் மோசமடைவதைக் கண்ட யூசுப் சாய் இரண்டு தம்பிகளுடன் மலாலாவையும் இஸ்லாமா பாத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார். ஆனால் அங்கே இருக்கப் பிடிக்காமல் மீண்டும் மிங்கோராவிற்கு வந்து விட்டனர்.
மிங்கோராவிலிருந்து பெஷாவர் நகருக்கு இடம் பெயர்ந்தனர்.
அந்தக் காலகட்டத்தில் குடும்பத்துடன் நெருங்கிய நண்பர்களின் வீடுகளில் தங்கினார்கள். அப்போதெல்லாம் அவர்கள் தங்கியிருக்கும் நகரத்தை ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது மலாலாவின் வழக்கம்.
போர் ஓய்ந்தவுடன் மலாலாவின் குடும்பத்தினர் ஊர் திரும்பி ஒன்று சேர்ந்தனர்.
கேப்பிடல் டாக்என்ற பிரபல நியூஸ் சேனலில் தாலிபான்களின் நடவடிக்கைகள் பற்றிக் காய்ச்சி எடுத்தாள் மலாலா. தான் அரசியல்வாதியாக விரும்புவதாகவும், பெனாசிர் பூட்டோதான் தன்னுடைய ரோல்மாடல் என்றும் தெரிவித்த அவள் அரசியல்வாதியாக மாறினால் தான் இந்த சமூகத்திற்கு நன்மைகள் செய்ய முடியும், சமூகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்தாள்.
டிசம்பர் மாதத்தில் பி.பி.சி.யில் தொடர் கட்டுரைகள் எழுதியது மலாலாதான் என்பது அனைவருக்கும் வெளிப் படையாகத் தெரியவந்தது.
பல்வேறு ஊடகங்களில் அவளைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்தன.
மலாலாவின் இந்த வெற்றி பல மாணவிகளுக்கு நம்பிக்கை ஊட்டியது.
மாணவர்களிடையே இதழியலை அறிமுகப்படுத்தி எழுத வைக்கும் முயற்சியான ஓப்பன் மைண்ட் ப்ராஜக்ட்டில்தன்னை இணைத்துக் கொண்டாள் மலாலா.
ஸ்வாட் மாவட்டத்தில் இருந்த சிறுவர் சபையின் தலைவியாகவும் உருவெடுத்தாள்.
சி.என்.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அரசாங்கம் கல்விக்காக பெரும் தொகையைச் செலவிட வேண்டும்.
தாலிபான்களால் எனது உடலைச் சுட்டு வீழ்த்திவிட முடியும், ஆனால் ஒருபோதும் எனது கனவுகளைச் சுட்டு வீழ்த்த முடியாது. நான் செல்லவேண்டிய தூரம் அதிகம். உலகின் எந்தவொரு சிறுமியும், சிறுவனும் கல்வி கற்கும் உரிமையைப் பெறும்வரை என்னுடைய இந்தப் பயணம் தொடரும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
புகழ் அதிகமாகும்போதே ஆபத்தும் அதிகரித்தது. மலாலாவின் பேஸ்புக் கணக்கில் அவளுக்கு பலர் கொலை மிரட்டல் விடுத்தனர். அவள் பெயரில் பல போலிக் கணக்குகளைத் தொடங்கி அவளுக்கு அவப் பெயர் ஏற்படுத்தி மகிழ்ந்தார்கள்.
ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத மலாலா பெண் கல்விக்காகப் போராடுவது ஒன்றே தனது இலட்சியம் என்று களத்தில் இறங்கியிருந்தார்.
அவள் அடிக்கடி தொலைக்காட்சிகளிலும், செய்தித் தாள்களிலும் பேட்டிகள் கொடுத்து வந்தாள்.
கல்விசார் செயல்பாடுகள் அவளுக்கு மேலும் மேலும் புகழைப் பெற்றுத் தந்தன.
அவளுக்கு பல விருதுகளும் கிடைக்கத் தொடங்கியதை அடுத்து நாட்டு மக்கள் அவளைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினார்கள்.
இதையெல்லாம் கேள்விப்பட்ட தாலிபான்கள் எரிச்சல் அடைந்தனர். அவர்களின் கோபம் மலாலாவின் மேல் திரும்பியது.
அவளை இப்படியே விட்டுவைக்கக்கூடாது என்று  தங்கள்  இரகசியக் கூட்டங்களில் முடிவெடுத்து தங்கள்  திட்டத்தை செயல்படுத்தும் நாளுக்காகக் காத்திருக்கத் தொடங்கினார்கள்.

பெரும் ஆயுதங்களைக்கூட எளிதாகக் கையாளும் திறன் பெற்ற தாலிபான்கள் பள்ளிக்குச் செல்லும் சிறுமியான மலாலாவைக் கண்டு பயம் கொண்டது வேடிக்கைதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக