செவ்வாய், 23 ஜூன், 2015

மலாலா - 12

மருத்துவமனையில்...
இராணுவத்தினருக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய பெரிய மருத்துவ மனையான சி.எம்.ஹெச். சிற்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.
600 படுக்கை வசதிகளுடன் புதிய கட்டங்கள் எழும்பிக் கொண்டிருந்த மருத்துவமனை அது.
மாலை ஐந்து மணிக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் உடனே மலாலா அனுமதிக்கப் பட்டாள்.
ஹலோனல் ஜுனாய்டு என்ற நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் முதலில் பரிசோதித்தார்.
தற்போது நினைவுகள் உள்ளன ஆனால் பேச முடியவில்லை என்று கூறிய அவர் இடது கண்ணுக்கருகே குண்டு துளைத்த இடத்தில் தையல் போட்டுவிட்டு பின்னர் ஸ்கேன் செய்து பார்த்து தலைக்குள் குண்டு இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே இடது தோள் பட்டைக்கு அருகில் குண்டு இருப்பதைக் கண்டறிந்தார். மேலும் பல பரிசோதனைகளை அவசரமாகச் செய்தார்.
குண்டு துளைத்ததனால் சிதறிய எலும்புத் துண்டுகள் மூளையின் ஜவ்வை லேசாக பாதிப்படையச் செய்துள்ளன என்பதையும் கண்டுபிடித்தார்.
அறுவை சிகிச்சை தற்போது தேவையில்லை என்று  கூறிவிட்டார் அவர்.
மலாலாவின் தந்தைக்கு இந்த மருத்துவமனையில்  தன் மகளை சரிவர கவனிக்கவில்லையோ என்ற  குழப்பம் ஏற்பட்டது. அதனால் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாமா?” என்று கேட்டார்.
என்னுடைய அனுபவத்தில் நான் இதுபோல் ஆயிரம் மலாலாவைப் பார்த்திருக்கிறேன்.  எனவே நீங்கள் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் பெண்ணின் உயிருக்கு எதுவும் நேர்ந்துவிடாது, நம்பிக்கை கொள்ளுங்கள்என்று மருத்துவர் உறுதியாகக் கூறியதைக் கேட்டபின்னரே யூசுப் சாய் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
அதே நேரத்தில் மலாலாவின் தாயாருக்கு விஷயம் தெரிந்துவிட்டது. அவர் மலாலாவின் பாட்டியிடம் சென்று பேத்திக்காக மனமுருகி பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொண்டார்.
பெரியவர்களுடைய மனமுருகிய பிரார்த்தனைக்கு அல்லாஹ் உடனடியாக செவி சாய்ப்பான் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
மலாலாவின் தாயாரிடம் அக்கம்பக்கத்தவர், சுற்றத்தார் ஆகியோர் விசாரிப்பதற்காக வந்தவண்ணம் இருந்தனர்.
எந்தப் பக்கம் திரும்பினாலும் மலாலாவின் அழகிய முகம் தெரிந்தது. ஊரில் அனைவரும் மலாலாவைப் பற்றியே பேசித் தீர்த்தார்கள்.
கற்பனையில் அவர்கள் சொல்லும் விஷயங்களைக் கேட்கக் கேட்க மலாலாவின் தாய்க்கு  பயம் அதிகரித்தது. மலாலாவின் தம்பிகள் இருவரும் ஒரு ஓரமாக கதறி அழுதபடியே அமர்ந்திருந்தனர்.
தன் மகளுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்று நினைத்துப் பார்த்தவண்ணம் இருந்த நேரம் ஹெலிகாப்டர் ஒன்று இறங்கும் சத்தம் கேட்டது.
மலாலா வந்துவிட்டாள், மலாலா வந்துவிட்டாள்என்று சுற்றியிருந்தவர்கள் கூச்சலிட்டார்கள்.
மலாலாவின் தாய், சத்தமாக யா அல்லாஹ் என் மகளை உன்வசம் ஒப்படைத்துவிட்டேன், அவளை மீண்டும் என்னிடம் தருவது உன் பொறுப்புஎன்று கதறியழுதார்.
மலாலாவின் ஊருக்குப் போன் செய்த மரியம் டீச்சர் மலாலாவின் நிலை பற்றி எடுத்துக் கூறிவிட்டு, “நீங்கள் இங்கே வந்து அழுதுவிடக் கூடாது. நீங்கள் நம்பிக்கை இழந்து பேசுவதை மலாலா கேட்டால் அவளும் நம்பிக்கை இழக்க நேரிடும் என்பதால் நீங்கள் அவளிடம் நம்பிக்கை தரும் வார்த்தைகளைத்தான் பேசவேண்டும்என்று கூறினார்.
அதன்பின்னர் அங்கிருந்து கிளம்பிய மலாலாவின் தாயும், அடாலும் மாலை நேரம் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். மலாலா இருக்குமிடத்தை நோக்கி விரைந்து சென்றனர்.
யூசுப் சாய் தன்னுடைய மனைவியிடம், “எந்த ஒரு சூழ்நிலையையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். இறைவனின் விருப்பம் எதுவென்றாலும் அதை நாம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.என்று தைரியம் கூறித் தேற்றினார்.
ஆனால் சிறுவன் அடால் எவ்வளவோ முயன்றும் தன்னுடைய அழுகையை அடக்க முடியாமல் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினான்.
அக்காவை அதுவரை பார்த்திராத நிலையில் பார்க்கப் பார்க்க அவனுக்குள் அழுகை பொங்கியது.
தன்னிடம் அன்பாகப் பேசி விளையாடிய அக்கா இப்படி பேச்சு மூச்சற்றுக் கிடக்கிறாளே என்ற அதிர்ச்சியை அவனால் தாங்கிக் கொள்ள  முடியவில்லை.
ஐ.நா.வின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் உடனடியாகக் கண்டனம் தெரிவித்தார்கள்.
தங்கள் நாட்டில் உயர்தரமான சிகிச்சை வழங்குவது குறித்து  பாகிஸ்தான் இராணுவத்தின்  அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உயர்மட்டக் குழுவை அனுப்பி இருந்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.
அபுதாபி இளவரசரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராணுவத்தின் துணைத் தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஸயாத் அல் நயான் உயர்ந்த லட்சியத்திற்காக தீவிரவாதிகளால் சுடப்பட்டு படுகாயமடைந்துள்ள  மாணவிக்கு எங்கள் நாட்டில் உயர்ந்த மருத்துவ சிகிச்சை வழங்க எங்கள் அரசு தயாராக உள்ளதுஎன்று உடனே தெரிவித்தார்.
ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலி, முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி லாரா புஷ் ஆகியோர் மலாலா சுடப்பட்டதைக் கண்டித்து கட்டுரை எழுதினார்கள்.
அமெரிக்காவிலிருந்து ஹிலாரி கிளிண்டன் தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பிரபல பாப் பாடகி மடோனா  தன்னுடைய மனித சுபாவம்என்ற பாடலை மலாலாவிற்காக சமர்ப்பணம் செய்தார்.
பாகிஸ்தானின் முக்கிய அரசியல்வாதிகள், பல்வேறு தலைவர்கள், கல்வி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், முக்கியப் பிரமுகர்கள், ஆளுநர், தொழில் அதிபர்கள் என்று பல்வேறு தரப்பினரும் நேரில் வந்து பார்த்துச் சென்றனர்.
ஆளுநர் மலாலாவின் மருத்துவச் செலவுக்காக ஒரு லட்சம்  ரூபாய் தருவதாக வாக்குக் கொடுத்தார்.
பொதுவாக சாகும் தருவாயில் இருப்பவர்களைத்தான் இப்படி வந்து பார்த்து ஆறுதல் சொல்வார்கள். நம்பிக்கை தரும் விதமாகப் பேச யாருமே வரவில்லையே என்று மலாலாவின் தந்தை மிகவும் வருந்தினார்.
அடால் அப்போது டி.வி.யை ஆன் செய்தான். அதைப் பார்த்த யூசுப் சாய் அவனை அதட்டினார்.
ஆனால் மரியம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்தாள் மலாலா.
உலகின் பல்வேறு இடங்களில் மலாலா உயிர் பிழைக்க வேண்டுமென்று செய்யப்பட்ட பிரார்த்தனைகள், அவளுக்காக கதறி அழுத குழந்தைகள், பள்ளி மாணவ மாணவிகள் ஆகியோரின் பேச்சுக்களைப் பார்த்தும், கேட்டும் சற்றே தெளிவடைந்தாள்.
நமக்காக இத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற நினைப்பே அவளுக்கு ஆறுதல் அளித்தது.
அதே நேரத்தில் உடல்நிலை மேலும் மோசமடையத் தொடங்கியது. வாந்தி வருவதுபோல் இருந்தது.
திரும்பவும் ஸ்கேன் செய்து பார்த்தபோது மூளையின் வீக்கம் அதிகரித்திருப்பது தெரிந்தது.
அபாயகரமான வீக்கமாகவே அது இருந்தது.
எலும்புத் துகள் உள்ளே சென்றிருப்பதால் மண்டை ஓட்டை லேசாக விலக்கிப் பார்த்துவிடலாம். இதுதான் அறுவை சிகிச்சைக்கான சரியான நேரம்என்று மருத்துவர் கூறினார்.
மருத்துவமனை நடைமுறைப்படி பல படிவங்களில் யூசுப் சாயிடம் கையெழுத்துக்களை வாங்கினார்கள்.
அறுவை சிகிச்சை இரவு 1.30 மணிக்குத் தொடங்கியது.
யூசுப் சாய் இறைவா என் உயிரைக்கூட எடுத்துக் கொள் ஆனால் மலாலாவின் உயிரை மீண்டும் கொடுஎன்று மனமுருகிப் பிரார்த்தித்தார்.
மலாலாவின் தாயோ புனித நூலான குர் ஆனைத் தொடர்ந்து படித்தபடியே இருந்தார்.
அதைப் பார்த்த மரியம் மிகவும் வியந்து போனார்.
தொடர்ந்து இப்படி வேறு எந்தச் சிந்தனையும் இல்லாமல் மனம் ஒன்றி குர்ஆனைப் படிக்க முடியுமா? என்பதே அவரின் வியப்புக்குக் காரணம்.
அங்கிருந்த நர்ஸ், “மலாலாவிற்கு இரத்தம் தேவைப் படுகிறதுஎன்று கூறியவுடன்  யூசுப் சாயின் நண்பர் உடனே இரத்தம் கொடுத்தார்.
மண்டையோட்டின் சிறிய பகுதியை எடுத்து அடி வயிற்றுப் பகுதியில் வைத்துத் தைத்தார்கள்.
மூன்று மாதங்கள் சென்றவுடன் மீண்டும்  பொருத்திக் கொள்ளலாம் என்று கூறினார்கள்.
எங்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் இதே போல்தான் தாக்கப்படுவார்கள் என்று தாலிபன் அமைப்பு தெரிவித்திருந்த சூழ்நிலையிலும் அதற்கு பயப்படாமல் மூன்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் அவளின் உடல் நிலையைப் பரிசோதிப்பதற்காக வந்திருந்தனர்.
அடுத்தநாள் காலையில் இராணுவப் படைத்தளபதி ஜெனரல் ஹயானி வருகை புரிந்தார்.
ஸ்கேன் ரிப்போர்ட் மற்றும் பரிசோதனை முடிவுகளைப் பார்த்துவிட்டு, “வெளிநாட்டில் சிகிச்சையளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதற்கான ஏற்பாடுகளை நான் செய்து தருகிறேன்என்று கூறினார். அதுகுறித்து தேவையான நடவடிக்கைகளைத் தொடங்கினார்.
பிரபல கிரிக்கெட் வீரர் இம்ரான்கான், தாலிபான்களின் வெறியாட்டத்தால் தன்னுடைய மகனை இழந்த தகவல் தொடர்புத் துறை மந்திரி மியான் இவ்திஹார் குசைன், பழங்குடியினத்தவரின் முதல்வர் ஹைடர் கோட்டி ஆகிய அனைவரும் மலாலாவைப் பார்க்க வந்தபோதும்ஒருவரையும் மருத்துவமனை நிர்வாகம் மலாலா இருந்த அறைக்குள் அனுமதிக்கவில்லை.
நம்மை விட்டு மலாலா ஒருபோதும் பிரிய மாட்டாள் நீங்கள் எந்த சூழலிலும் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். இறைவன் கருணை நிறைந்தவன் அவன் நம்மைக் கைவிட மாட்டான்என்று கோட்டி ஆறுதல் கூறிச் சென்றார்.
மாலை 3 மணியளவில் பர்மிங்ஹாமில் வேலை பார்க்கும் ஜாவித் கையானி, பியானோ ரினால்ஸ் என்ற பிரிட்டிஷ் டாக்டர்கள் இருவர் ராவல் பிண்டியிலிருந்து மலாலாவைப் பார்க்க வந்தார்கள்.
அவர்கள் வந்து பரிசோதித்த பின்னர் அடிப்படை வசதிகள், தொடர் கவனிப்பு போன்றவை இல்லாத காரணத்தால் மலாலா இறக்கும் சூழல் கூட ஏற்படலாம் என்று கூறினார்கள்.
உள்துறை அமைச்சர் ரஹ்மான் மலாலாவை வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.
யூசுப் சாய் பாஸ்போர்ட்டைக் கையில் ஏந்தியபடி, “இது அவளை சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லப் போகிறதா? இல்லையெனில் இறைவனின் திருவடிகளுக்கே அழைத்துச் செல்லப் போகிறதா?” என்று மனம் வெதும்பினார்.
வியாழக்கிழமை காலையில் மலாலா உயிர்விடப்  போகிறாள் என்றே அவர் நினைத்தார். சிறுநீரகம், நுரையீரல் ஆகியவை தங்களின் செயல்பாட்டை 75 சதவிகிதம் இழந்ததன் அறிகுறியாக முகம், உடல் ஆகியவை வீங்கத் தொடங்கியிருந்தன.
டாக்டர் பியானோ நீங்கள் ராவல்பிண்டியிலிருக்கும் இராணுவ மருத்துவமனைக்கு உடனடியாக மாற்றி விடுவது நல்லதுஎன்று கூறினார். அதன்படியே ஆயத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இவளைக் காப்பாற்றத் தவறிவிட்டோமானால் பாகிஸ்தானின் அன்னை தெரசாவை நாம் இழந்து விட்டவர்களாகி விடுவோம்என்று நினைத்தார் டாக்டர் பியானோ.
ராவல்பிண்டிக்குச் சென்று மூன்றுமணி நேர தொடர் சிகிச்சைக்குப் பிறகே மலாலா இயல்புநிலையை நோக்கித் திரும்பத் தொடங்கியிருந்தாள்.
இருந்தபோதும் மலாலாவை தொடர் கவனிப்பில் வைத்திருந்தார்கள். அவளை பாகிஸ்தான் பிரதமர் பார்ப்பதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டது.
எந்த விஷயத்தாலும் நோய்த் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அவ்வளவு கவனம் செலுத்தினார்கள்.
இராணுவமே அனைத்து முடிவுகளையும் எடுத்தது. மலாலாவின் பெற்றோர்களைவிட அந்த சூழலில் அவர்களே சரியான முடிவுகளை எடுத்தார்கள்.
மருத்துவர்கள், “மலாலாவின் வலது மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் அவளின் இடதுபக்கத்தில் உள்ள உறுப்புகள் பாதிப்படையத் தொடங்கியுள்ளன. அவளுக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிப்பதே சரியான தீர்வுஎன்று கூறினார்கள்.
மலாலாவைக் கொலைசெய்ய முயன்றவர்களுக்கு எதிராக பாகிஸ்தானில் ஃபத்வா அறிவிக்கப்பட்டது.
உலக கல்விக்கான ஐ.நா. சிறப்புத் தூதரும், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமருமான கோர்டான் பிரௌன்  2015 ஆம் ஆண்டில் உலகில் எந்தக் குழந்தையும் கல்வி கற்காமல் இருக்கக்கூடாது என்ற நோக்கத்துடன், “நான் மலாலாஎன்ற மனு இயக்கத்தைத் தொடங்கினார்.
அக்டோபர் 15ம் தேதி திங்கள்கிழமை இங்கிலாந்திற்குப் புறப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவரை அழைத்துச் செல்ல விமானம் கொடுத்து உதவியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.
அவளுடன் யூசுப் சாயுன் உடன் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் யூசுப் சாயின் உறவினர் ஒருவர் மலாலாவின் குடும்பத்தினருக்கு தாலிபான்களால் ஏதேனும் ஆபத்து நேரிட வாய்ப்புள்ளது என்று கூறியதால் யூசுப் சாய் உடன் செல்லாமல் அங்கேயே இருந்துவிடுவது என்று முடிவு செய்தார்.
மலாலாவிற்கு நேர்ந்தது அவளின் தம்பிகளுக்கும் நேர்ந்துவிடக்கூடாது.  எனவே நான் போகமுடியாது. எனக்காக நீங்கள் செல்ல முடியுமா?” என்று டாக்டர் பியானோவிடம்  கேட்டுக் கொண்டார்.
நான் கடவுளிடத்தில் முழுமையாக என் குழந்தையை ஒப்படைத்துவிட்டேன். என் குழந்தையின் எதிர்காலத்தை அவரே வழிநடத்துவார்என்றும் கூறினார்.
இரட்டை படுக்கையறை வசதியுடன், முதல் வகுப்பு இருக்கைகள், சிறிய மருத்துவமனை வசதி, நர்ஸ்கள், டாக்டர்கள் என்று பலவிதமான வசதிகளை உள்ளடக்கிய விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அபுதாபியில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு பர்மிங் ஹாம் செல்லும் விமானம் அது. யூசுப் சாய் மற்றும் மலாலாவின் தாய் ஆகியோர் உடன் செல்வதற்கான ஏற்பாடுகளையும் அரசாங்கமே முன் நின்று செய்தது. பெரும்பான்மையானோர் மலாலா இறந்துவிடுவாள் என்றே நினைத்தார்கள்.

ஆனால் தாலிபன்களுக்கு சவால்விடும் விதமாக, ‘வீழ்வேனென்று நினைத்தாயோஎன்ற மகாகவி பாரதியின் வாக்கிற்கேற்ப எழுந்து நின்றாள் மலாலா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக