செவ்வாய், 23 ஜூன், 2015

ஏவுகணை விஞ்ஞானி அப்துல்கலாம் - 2

கலாமின் பிறப்பு
தமிழகத்தின் புகழ்பெற்ற ஒரு ஆன்மீகத் தலம் இராமேஸ்வரம். வடநாட்டில் காசியும் தென்னாட்டில் இராமேஸ்வரமும் இந்துக்களின் புனிதமான ஊர்கள்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சின்னஞ்சிறிய தீவு. இந்தியாவின் ஈடு இணையற்ற மனிதரைப் பெற்றெடுத்த பெருமையைப் பெற்ற ஒரு தீவு.
அந்தக் காலத்தில் இராமேஸ்வரம் செல்வது என்பது ஒரு சிரமமான காரியம். மண்டபம் எனும் இடத்திலிருந்து இராமேஸ்வரம் செல்வதற்கு அந்தப் பகுதி முஸ்லீம்களால் படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அத்தகைய பெருமை வாய்ந்த ஊரில் இருந்த அலாவுதீன் மரைக்காயர் முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசலின் மூத்த அவுலியாக பதவி வகித்து வந்த ஜெயின் அலாவுதீன் என்பவருக்கும் அவரது மனைவி ஆஷியம்மா என்பவருக்கும் 1931ம் வருடம் அக்டோபர் மாதம் 15ம் தேதி  அப்துல் கலாம் பிறந்தார்.
அவரின் முழுப் பெயர் அவுல் பக்கீர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாம். சுருக்கமாக ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.
கலாமின் தந்தை ஜெயின் அலாவுதீன் அதிகம் படிக்காதவராக இருந்தபோதும் அனுபவ அறிவு நிரம்பப் பெற்றவர். தர்ம சிந்தனையும், ஆழ்ந்த இறை பக்தியும் உடையவர். ஆடம்பரத்தை விரும்பாதவர்.
மசூதி தெருவில் கலாமின் முன்னோர்களால் கட்டப்பட்ட பாரம்பரிய வீட்டில்தான் அவர்கள் வசித்து வந்தனர். அந்தப் பகுதியில் சில இந்துக் குடும்பங்களும் வசித்து வந்தனர். அனைவரும் மத ஒற்றுமையோடு வாழ்ந்து வந்தார்கள்.
நடுத்தரமான குடும்பம்தான் என்றபோதும் வந்தவர்களை வரவேற்று உபசரிப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்கள்தான். வீட்டிலுள்ளவர்களைவிட வெளியில் இருந்து வருபவர்கள்தான் அவர்கள் வீட்டில் அதிகமாக சாப்பிடுவார்கள். அனைவரையும் மனம் கோணாமல் அன்போடு உபசரிப்பது கலாமின் அன்னையுடைய வழக்கம்.
கலாமை அவரது தாயார் மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார். கலாம் என்ன கேட்டாலும் கிடைக்கும். மற்ற சகோதர, சகோதரிகளும் அவர்மேல் பிரியமாகவே இருந்தார்கள்.
கலாமின் தந்தை மத வேறுபாடுகளைப் பாராமல் இந்துக்களிடமும் அன்பாகவே பழகி வந்ததை சிறு வயதிலிருந்தே பார்த்து வளர்ந்த கலாம் இன்றுவரை அதேபோலவே வாழ்ந்து வருகிறார்.
கலாமின் தந்தை காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார், மதக் கடமையான ஐந்து வேளை தொழுகையில் ஒரு நாளும் தவறுவதில்லை. இறைநம்பிக்கை மிகுந்தவராக இருந்த காரணத்தால் அந்தப் பழக்கமும் கலாமிடம் இயல்பாகவே அமைந்திருந்தது.
‘‘எந்த நேரத்திலும் இறைவன் நமக்குத் துணையிருப்பான் அதனால் நாம் பிரச்சனைகளைக் கண்டு அஞ்சக்கூடாது’’ என்று அறிவுரை கூறுவார் கலாமின் தந்தை.
அவரது தாயாரும் பல நீதிக்கதைகளைக் கூறி கலாமை நல்வழிப்படுத்தினார். பெருந்தன்மை போன்ற குணங்களை அவரது அன்னையிடமிருந்து பெற்றார் கலாம்.
இயற்கையின் அளப்பரிய ஆற்றலைக் காணும் சந்தர்ப்பம் 6 வயதானபோது அவருக்குக் கிடைத்தது. அவரது தந்தை கஷ்டப்பட்டுக் கட்டிய படகு ஒருநாள் கடலின் அளப்பரிய சீற்றத்தால் சுக்கு நூறாகிப் போனதைப் பார்த்த கலாமிற்கு இயற்கையின் சக்தி வியப்பளித்தது.
படகை கட்ட ஆரம்பித்ததிலிருந்து அது இயற்கையினால் சுக்குநூறானது வரை கலாம் அருகிலிருந்து பார்த்தார்.
பல நல்ல பழக்கவழக்கங்கள் அவரது குடும்பத்தாரிடமிருந்து அவருக்கு வந்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக